தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சட்டவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
2008ஆம் ஆண்டு நடந்த இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக, நேற்று முன்தினம் மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் காலையில், மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், தமக்கு நெருக்கமான சட்டவாளர்களுடன் கோத்தாபய ராஜபக்ச அவசர ஆலோசனை நடத்தினார்.
அலி சப்ரி, காலிங்க இந்திரதிஸ்ஸ, அசித் சிறிவர்த்தன ஆகிய சட்டவாளர்களுடனேயே கோத்தாபய ராஜபக்ச ஆலோசனை நடத்தியுள்ளார்.
எந்த நேரத்திலும் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து, தமக்கு விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே கோத்தாபய ராஜபக்ச சட்ட நிபுணர்களுடன் இந்த ஆலோசனையை நடத்தியுள்ளார்.