மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கோரி சபை நடுவில் தனித்து போராடிய துலிப் வெத ஆரச்சி

134 0

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி அம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் திலிப் வெத ஆராச்சி சபை நடுவில் அமர்ந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (21)  வரவு செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் தான் உரையாற்றிய பின்னர், சபை நடுவே சென்று கீழே அமர்ந்த அவர் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சர்வதேச மீனவர் தினத்தையொட்டி, கறுப்பு உடையணிந்தே திலிப் வெதஆராச்சி இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகைதந்திருந்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இவர் உரையாற்றும் போது, டீசல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு, எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை, மீனவர் குடும்பங்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து தனது உரை முடிவடையும் போது, இன்று சர்வதேச மீனவர் தினமாகும். ஆனால் மீனவர்கள் கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர். அதனால் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி இன்றைய பாராளுமன்ற கூட்டம் நிறைவடையும் வரையில் சபையில் உண்ணாவிராதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்து சபையின் நடுவில் சென்று கீழே அமர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தச் செல்ல இடமளிக்குமாறும், உங்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை சபாநாயகருக்கு அறிவித்து, ஜனாதிபதியின் கவனத்திற்கு  கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.  ஆனாலும் திலிப் வெதஆராச்சி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்தும் அவ்விடத்தில் இருந்து எழுந்துச் செல்லுமாறு குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் இராமநாதன் மீண்டும் வலியுறுத்தினார்.

அதனை அடுத்து, சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் அசோக்க அபேசிங்க ஆகியோர் சபை நடுவுக்கு வந்து திலிப் வெதஆராச்சியை அவ்விடத்தில் இருந்து எழுப்பி அவரின் ஆசனத்திற்கு அழைத்துச் சென்றனறர்.