1960 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஒருரவருக்கு ஒரு வாரத்துக்கு ஒரு கிலோ அரிசி மானியமாக வழங்கப்பட்டது. அவ்வாறான ஒரு திட்டத்துக்கு தற்போது சென்றிருந்தால் அது மக்களின் உணவு தேவையை உறுதிப்படுத்தி இருக்கும்.
அடுத்த வருடத்துக்காக முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு – செலவுத் திட்டத்தில் நீண்டகால ரீதியில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் மக்கள் தற்போது நாட்டில் எதிர்கொண்டிருக்கின்ற உடனடியான நெருக்கடிகளை தீர்ப்பதற்கான திட்டங்கள் உள்ளடக்கப்படாமை அடுத்த வருடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவிக்கின்றார்.
முக்கியமாக மக்களின் உணவுப் பிரச்சினை மற்றும் எரிபொருள்களின் விலை மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளமை தொடர்பில் எந்தவிதமான ஒரு நிவாரண ரீதியான யோசனைகளும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அது தொடர்பாக தற்போது கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. ஒரு சிலர் இதனை அபிவிருத்தி சார்ந்த பட்ஜெட் என்ற தற்போதைய நிலையில் இவ்வாறான பட்ஜெட்டையே முன்வைக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். மறுபுறம் இது சாதாரண பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கு நிவாரண உதவிகளை உள்ளடக்காத பட்ஜெட் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
இந்நிலையில் வாரம் ஒன்றுக்கு ஒருவருக்கு ஒரு கிலோ அரிசியை வழங்கும் வகையில் ஒரு நிவாரணத் திட்டம் கட்டாயமாக இந்த வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் அகிலன் கதிர்காமர் சுட்டிக்காட்டுகிறார். அதுமட்டுமின்றி உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் சகல மக்களையும் உணவு சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கும் திட்டங்கள் இல்லை என்றும் அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அகிலன் கதிர்காமர் சுட்டிக்காட்டுகிறார்.
கலாநிதி அகிலன் கதிர்காமருடனான நேர்காணலின் முக்கிய விடயங்கள் வருமாறு
கேள்வி : வரவு செலவுத் திட்டம் தொடர்பான உங்கள் பொதுவான பார்வை என்ன?
பதில் இந்த பட்ஜெட் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்த வரலாற்றிலேயே ஒரு மிக மோசமான நிலைமை மற்றும் சுமார் நூறு வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற ஒரு நெருக்கடி நிலைமையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வருடம் எமது மொத்த தேசிய உற்பத்தி கிட்டத்தட்ட 10 வீதத்தால் சுருங்கப்போகிறது. இந்நிலையில் இந்த பட்ஜெட் பொருளாதார நெருக்கடியை சீர் செய்யுமா என்பது தொடர்பான ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள் இல்லை என்றுதான் கூறவேண்டும். எனவே 2023ஆம் வருடத்திலும் ஒரு நெருக்கடி நிலைமையே நாட்டில் காணப்படும். என்னைப் பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடி அடுத்த வருடத்தில் இதனை விட அதிகரிக்கும் என்பதே மதிப்பீடாக இருக்கிறது. எமது மொத்த தேசிய உற்பத்தி 8 வீதத்தால் உயரவேண்டும் என்பதே ஜனாதிபதியின் அறிவிப்பாகவும் இருக்கிறது.
நாட்டில் சனத்தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் மொத்த தேசிய உற்பத்தி 5 விதத்திலாவது அதிகரிக்க வேண்டும். இங்கு அதற்கு மாறாக சுருங்கும் என்று கூறும்போது அது பெரும் பாதிப்பை பொருளாதார ரீதியில் நாட்டுக்கு ஏற்படுத்தும். ஒருவேளை அடுத்த வருடம் நடுப்பகுதியில் மற்றுமொரு வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வரும் நிலைகூட ஏற்படலாம்.
கேள்வி : சரி இந்த வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் எதுவாக இருக்கின்றது?
பதில் இது முற்றுமுழுதாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்வதற்கான பட்ஜெட்டாகவே காணப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் காணப்படுகின்ற வருமானம் செலவினங்கள் மற்றும் ஏனைய விடயங்களை பார்க்கும்போது அது தெரிகிறது. சர்வதேச நாணய நிதியம் இரண்டு விடயங்களை முன்வைத்து இருக்கிறது. அதாவது கடன் மீள்செலுத்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக 2025 ஆம் ஆண்டு இலங்கையின் வரவு – செலவுத் திட்டத்தில் செலவானது வரவைவிட குறைவாக இருக்க வேண்டும் என்ற விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இதனை ஒரு சிக்கனமான வரவு செலவுத் திட்டமாக கூற முடியும்.
கேள்வி : இதனை சிக்கென பட்ஜெட் என்ற நீங்கள் கூறுவதை சற்று விளக்க முடியுமா?
பதில் பலவிதமான மக்களுக்கு தேவையான செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. நிவாரணங்கள் திட்டங்கள் கூட முன்வைக்கப்படவில்லை. பொதுவாக தற்போது இலங்கையில் விலைவாசிகள் கடுமையாக உயர்வடைந்து இருக்கின்றன. பணவீக்கம் ஆனது 60 வீதமாக காணப்படுகிறது. இவ்வாறு பணவீக்கம் இருக்கும்போது செலவுகளும் அதிகரிக்கப்படுவது வழமையாகும். 2021ஆம் ஆண்டு 30 ஆயிரம் ரூபாய் உழைத்தவர் இப்போது 50,000 ரூபா உழைத்தால்தான் அதே வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும். ஆனால் அதற்கான எந்த விதமான மாற்றங்களும் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு எந்த விதமான சலுகைகளும் கிடைக்காது என்று ஜனாதிபதி தெளிவாகவே கூறியிருக்கிறார்.
கேள்வி : அப்படியானால் நீண்ட கால அபிவிருத்தியை நோக்கிய திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லையா?
பதில் நீண்ட காலத்திட்டங்கள் என்று பார்க்கும்போது கடந்த நான்கு தசாப்தகாலமாக பேசப்பட்டு வருகின்ற ஏற்றுமதியை அதிகரிக்கின்ற ஏற்றுமதியை திசைமுகப்படுத்திய ஒரு முறையைத்தான் இந்த பட்ஜெட்டில் முன்வைத்திருக்கின்றனர். இலங்கை ஒரு பக்கம் உணவு நெருக்கடி, உணவு உற்பத்தி வீழ்ச்சி, உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டிய தேவை போன்ற நிலையிலுள்ளது.
உணவு நெருக்கடி வராத நிலைமையை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. இதன் பின்னணியில் ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு மட்டும் கவனம் கொடுத்து மக்களுடைய தேவைகளை நிறைவு செய்ய முடியுமா என்பது கேள்வியாகும். பணவீக்கம் அதிகரித்து செல்வதால் மக்கள் உழைக்கும் சம்பளங்களின் பெறுமதிகள் குறைந்துவிட்டன. அதாவது உண்மை சம்பளம் என்று இதனை கூறுவார்கள். அது கிட்டத்தட்ட தற்போது 40 வீதமாக குறைவடைந்து இருக்கிறது.
அதேபோன்று அன்றாடம் தொழில் நடத்திப் பிழைப்பு நடத்துகின்றவர்களின் வருமானம் 50வீதத்தால் குறைவடைந்து விட்டதாக உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உணவு பொருட்களின் பணவீக்கமானது 90வீதமாக உயர்ந்துள்ளது. அதனால் மக்களின் உணவுக்கான செலவும் அதிகரித்துவிட்டது. இவை கவனத்தில் கொள்ளப்பட்டு பொருத்தமான பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை. சர்வதேச நாணயத்துடனான உடன்பாடு வந்தாலும் வராவிட்டாலும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் எப்படியும் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்படும். எனவே மக்கள் பயனடையாத வகையில் இந்த பொருளாதார வளர்ச்சி அடையப் போகின்றதா என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
கேள்வி : அப்படியானால் உங்களுடைய மதிப்பீடுகளின் பிரகாரம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வாறான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும்?
பதில் வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் உணவு தேவைக்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். நாட்டில் போதியளவு உணவு உற்பத்தியை செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது. மக்களை உணவு சென்றடைய வேண்டும். 1960 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஒருரவருக்கு ஒரு வாரத்துக்கு ஒரு கிலோ அரிசி மானியமாக வழங்கப்பட்டது. அவ்வாறான ஒரு திட்டத்துக்கு தற்போது சென்றிருந்தால் அது மக்களின் உணவு தேவையை உறுதிப்படுத்தி இருக்கும்.
1960 களில் அமுலாகிய திட்டம் திறந்த பொருளாதாரம் வந்தபின்னர் நிறுத்தப்பட்டது. ஒரு நெருக்கடி நேரத்தில் அது போன்ற திட்டம் மிக அவசியமாகும். அதேபோன்று இந்த வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலையுயர்வுதொடர்பாக எந்த விதமான விடயமும் முன் வைக்கப்படவில்லை. இவ்வருடத்தில் எரிபொருட்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்தன. அது பெரும் பாதிப்பை கொண்டு வந்திருக்கிறது. மேலும் கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது இலங்கைக்கு விநியோகிக்கப்படுகின்ற எரிபொருள்களின் அளவு அரைவாசியாக குறைவடைந்திருப்பதாக விடயதான அமைச்சர் தெரிவித்திருந்தார்.
பொருளாதாரத்தின் சுழற்சிக்கும் ஓட்டத்துக்கும் எரிபொருள் முக்கியமானது. போக்குவரத்து இல்லாவிட்டால் மக்கள் வேலை செய்யமுடியாது. உற்பத்தி செய்ய முடியாது. பொருளாதாரத்தை இயக்க முடியாது. எனவே எரிபொருள் பாவனை ஐம்பது 50 வீதம் குறைவடைந்துள்ளமை பெரும்பாதிப்பாகும். வரவு செலவுத் திட்டத்தில் அதைப்பற்றி எந்த விடயமும் இல்லை. உதாரணமாக இன்று ஆசிரியர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு போக்குவரத்து செலவாகவேவுள்ளது. எதிர்க்கட்சிகள் பலமாக இருந்தால் இந்த வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க வேண்டும். நிவாரணங்களை வழங்கக்கூடிய திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
கேள்வி : ஒருவருக்கு ஒரு வாரத்துக்கு ஒரு கிலோ அரிசியை வழங்கும் திட்டம் தற்போது சாத்தியமா?
பதில் இலங்கையில் தற்போது இருக்கின்ற சனத்தொகையில் இருக்கின்ற அனைவருக்கும் ஒரு வாரத்துக்கு ஒரு கிலோ அரிசியை வழங்கினால் அதற்கு வருடத்துக்கு 200 பில்லியன் ரூபாய் செலவாகும். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நெடுஞ்சாலை அபிவிருத்திக்கு ஒதுக்கியிருக்கின்ற தொகை 373 பில்லியன் ரூபாவாகும். அதன் ஒரு பகுதியை எடுத்து நான் கூறுகின்ற அரிசி உணவு மானியத்தை வழங்கி இருக்கலாம். அதேபோன்று போக்குவரத்து தொடர்பாக ஒரு நிவாரணம் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு வவுச்சர் முறையின் ஊடாக போக்குவரத்து செய்யக்கூடிய வகையிலான திட்டத்தை செய்திருக்க வேண்டும்.
இலங்கையில் சகல மாணவர்களுக்கும் போஷாக்கான மதிய உணவை வழங்குவதற்கான திட்டத்தை முன்வைத்திருக்கலாம். போஷாக்கு நெருக்கடி எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். அடுத்தடுத்த வருடங்களில் இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம். இந்த நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறையினர் முதலீடு செய்யமாட்டார்கள். எனவே அரசாங்கமே முதலீடுகளை செய்யவேண்டும்.
கேள்வி ஆனால் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் ஏற்றுமதி வருமானத்தை நோக்கியதாக இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறதே? அதனூடாகவும் நாட்டில் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் மற்றும் பொருளாதாரம் விரிவடையும் ஆற்றல் உள்ளதல்லவா?
பதில் உலக பொருளாதாரம் நெருக்கடி நிலைமையிலேயே காணப்படுகிறது. அதனால் இலங்கையில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற ஏற்றுமதிகள் எந்தளவு தூரம் பயணிக்கும் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. எனவே உலக பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பதால் சர்வதேச சந்தைகளில் போட்டியிடுவதும் இலகுவானதல்ல.
கேள்வி : வரி அறவிடும் நிலைமை எவ்வாறுள்ளது? இந்த வருமானம் சாத்தியமா?
பதில் வரி வருமானம் அதிகளவில் எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது. பட்ஜெட்டில் மொத்த செலவு 5819 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது. அதில் 2193 பில்லியன் ரூபாய் வட்டி செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 3000 பில்லியன் ரூபாய் அளவிலேயே இந்த அமைச்சுகளின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 3,400 பில்லியன் ரூபாய் வருமானம் வரியினால் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி பார்க்கும்போது வற் வரி மூலம் அதிகளவு வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பதும் ஆராயப்பட வேண்டியது. அமுலாக்கம் இங்கு முக்கியமானது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த அளவு தூரம் வரியை செலுத்துவது மக்களுக்கு நெருக்கடியாக அமையும். நடுத்தர மக்களின் வருமானமும் வீழ்ச்சி நிலையிலேயே இருக்கின்றது. இந்த நிலைமைக்கு மத்தியில் இந்தளவு தூரம் வரி வருமானம் பெறுவது சாத்தியமா என்று கேள்வி உள்ளது.
மாறாக வருடத்துக்கு உழைக்கின்ற வருமானத்துக்கு வரி அறவிடுவதற்கு பதிலாக நீண்ட காலமாக உள்ள கூடிய சொத்துக்களுக்கான ஒரு வரி அறவீட்டு முறை தற்போதைய சூழலில் மிகப் பொருத்தமாக இருக்கும். செல்வந்தர்களின் சொத்துக்களில் ஒரு வரியை அறவிடலாம். பிரிட்டனில் தற்போது பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சொத்து அதிகம் இருக்கின்றவர்களிடம் வரியை விடுவதற்கான ஒரு விவாதம் தற்போது நடைபெறுகிறது. ஆனா இந்த பட்ஜெட் முதலாளித்துவ வர்க்கத்தை பாதுகாத்து உழைக்கும் மக்களை பாதிக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது.
(நேர்கண்டவர் – ரொபட் அன்டனி)