பஷிலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்

121 0

நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

எனவே நாட்டின் இந்த நிலைமைக்கு காரணமான பிரதான சூத்திரதாரியான பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாடு வங்குரோத்தடைந்த சந்தர்ப்பத்தில் பஷில் ராஜபக்ஷவே நிதி அமைச்சராக செயற்பட்டார். நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

அதற்கமைய நிதி அமைச்சராக பொறுத்தமற்ற தீர்மானங்களை எடுத்து , நாட்டை வங்குரோத்தடையச் செய்த பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

எனவே உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். குறிப்பாக வரி சலுகையை வழங்கி 600 பில்லியன் ரூபா அரச வருமானம் இழக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இவருக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகளிலிருந்து பஷில் ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டார். தற்போது நாட்டுக்கு வருகை தந்து மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கா இவர் முயற்சிக்கின்றார்? உள்ளுராட்சி தேர்தல்களுக்காக பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பதற்காகவே இவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுஜன பெரமுனவை மறுசீரமைத்து கடந்து இரண்டு ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவைகள் போதும். இந்நிலையில் தற்போது மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டால் , பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்.

அண்மையில் அமைச்சர்களுக்கு மேலதிகமாக 38 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு வங்குரோத்தடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் முன்னுதாரணமாக செயற்பட வேண்டுமேயன்றி , தமது கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்குமாறு அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது.

பொதுஜன பெரமுனவின் ஊடாக ராஜபக்ஷ குடும்பம் நாட்டுக்கு பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிரதானியாக பஷில் ராஜபக்ஷவே செயற்படுகின்றார்.

எனவே இவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம். நாட்டு மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர் என்றார்.