பழிவாங்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது

120 0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே  மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறிதம்ம தேரர் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இருப்பினும் நிச்சயம் இதன் பின்விளைவுகளை  எதிர்காலத்தில்  அரசாங்கம் அனுபவிக்கும் என்றும் அதனை கண்டு நாம் கவலைப்பட வேண்டிய   தருணமொன்று  ஏற்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் சிறிதம தேரரை பார்ப்பதற்காக  நேற்று  (18) சென்றிருந்த போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்

பயங்கரவாத தடைச்சட்டத்தின்  தடுத்து வைக்கப்பட்டுள்ள  சிறிதம்ம தேரரை பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனை பார்க்கும் போது அரசாங்கத்தினால்  பழிவாங்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுகிறது என்பது தெட்டத் தெளிவாக புரிந்துக்கொள்ள  முடிகிறது.

மேலும், வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் தொடர்பான வழக்கு விசாரணைகளின் நீதிமன்றத்தின் தீர்ப்பு  ஓரிரு மாதங்களில் கிடைக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது.

குறித்த கைதுகள் அநீதியான, சட்டரீதியற்ற, பழிவாங்கல் நடவடிக்கைகளாக நாம் காண்கிறோம்.

இந்நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரையில் அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர், யுவதிகளால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நாம் ஆதரவாக செயல்படுவோம்.

அரசாங்கம்  இதுபோன்ற கைதுகளை மேற்கொண்டு அவர்களை சிறையில் அடைத்து அவர்களின் தலைவிதியை மாற்ற முடியாது. மேலும் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நிச்சயமாக எதிர்காலத்தில்  வருந்தும். இதனை கண்டு நாம் கவலைப்பட வேண்டி ஏற்படும் என்றார்.