அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகம் என விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டு , தமது அமைச்சரவையை பெயரிடாமல் தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்கின்றேன். கூட்டாக முன்னெடுக்கப்படும் மோசடிகளில் ஏமாந்துவிடாமல் இருமுறை சிந்தித்து மக்கள் அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று 43 ஆவது படையணியின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனாதிபதி , அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் என்பவற்றின் செலவுகளைக் கட்டுப்படுத்தி தெளிவானதொரு முன்னுதாரணத்தை வழங்காமல் ஒருபோதும் ஏனைய செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. வரவு – செலவு திட்டம் என்பது மக்களிடமிருந்து பெற்ற பணத்தை ஆட்சியாளர்கள் செலவிடுவதாக அமைந்து விடக் கூடாது.
தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் இதனை விமர்சித்துக் கொண்டிருப்பதால் மாத்திரம் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. எனவே விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் எதிர்தரப்பினர் தமது அமைச்சரவையை தற்போதே நியமித்துக் காண்பிக்க வேண்டும்.
தமது அமைச்சரவையை பெயரிடாமல் தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்கின்றேன். கூட்டாக முன்னெடுக்கப்படும் மோசடிகளில் ஏமாந்துவிட வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கான பிரதான காரணம் கூட்டு பயமாகும். சஹரானுடைய தாக்குதல்களைக் காண்பித்து மக்களை கூட்டு அச்சத்திற்கு உள்ளாக்கிமையே இதற்கான காரணமாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டை மீண்டும் வீழ்ச்சியடச் செய்வதற்கு மக்கள் இடமளித்துவிடக் கூடாது. வரிகளை அதிகரித்து அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிகத்துறை சார்ந்தோர் நாட்டை கைவிட்டு வெளிநாடுகளில் முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர. இதனால் ஏற்படக் கூடிய அபாய நிலைமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முறையான கொள்கையைப் பின்பற்றாவிட்டால் , தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழிற்துறைகள் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ளும் என்பதை அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டும். நாட்டில் 48 சதவீதமானோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ள தொழிற்சாலைதுறைகள் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கு அவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
அத்தோடு உண்மையில் வறுமையிலுள்ள குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு சமூர்த்தி உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்க வேண்டும். 30 மின் அலகுகளை விட குறைவான மின்சாரத்தை பாவிக்கும் 13 இலட்சம் குடும்பங்களே வறுமை நிலையிலுள்ள குடும்பங்களாகும். இவர்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகளை வழங்காமல் ஐ.தே.க. , பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படுமாயின் அதனை அனுமதிக்க முடியாது.
நாட்டில் 20 சதவீதமானோர் வறுமை நிலையிலுள்ளனர் என்றும் , அவர்களில் 48 சதவீதமானோருக்கு மாத்திரமே ஏதேனுமொரு வகையில் அரசாங்கத்தினால் சலுகைகள் வழங்கப்படுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இதே வேளை கூடுதல் வருமானம் பெறுகின்ற 20 சதவீதமானோரில் 12 சதவீதமானோருக்கு சமூர்த்தி , முதியோர் மற்றும் அங்கவீனமுடையோருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைகளை மாற்றியமைப்பதற்கு தேசிய பொருளாதாரவாதத்தை தோற்றுவிக்க வேண்டும். அதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை விட மாற்று வழியில்லை என்றார்.