தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் 27.64 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 87 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர். அந்த நாட்டின் ஒரு மாகாணம் பாலி. இந்த தீவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அதாவது பாலி தீவின் மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர் இந்துக்கள் ஆவர்.
கடந்த 15, 16-ம் தேதிகளில் பாலி தீவின் நூசா துவா பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஜி-20 அமைப்பின் மாநாடு நடைபெற்றது. கடந்த 15-ம் தேதி ஜி-20 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு பாலியின் பதுங் அருகே 60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டு பூங்காவில் பிரம்மாண்ட விருந்து அளிக்கப்பட்டது. இந்த பூங்காவில் 122 மீட்டர் உயரத்தில் கருட வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஷ்ணு சிலை உள்ளது. இதுதான் இந்தோனேசியாவின் மிக உயரமான சிலையாகும். இந்த பூங்காவில் அழகிய தாமரை குளமும் உள்ளது.
இதுகுறித்து பூங்காவின் இயக்குநர் ஸ்டீபானஸ் யோனதான் கூறும்போது, “இந்து கடவுள் விஷ்ணுவுக்காக அரசு சார்பில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. பூங்காவில் கருட வாகனத்தில் விஷ்ணு வீற்றிருக்கும் சிலை இந்தோனேசியாவின் அடையாளம் ஆகும். ஜி20 மாநாட்டின்போது சுமார் 400 முக்கிய பிரமுகர்களுக்கு பூங்காவின் தாமரை குளம் பகுதியில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்து இதிகாச நாடகங்களை அரங்கேற்றினர்” என்று தெரிவித்தார். இரவு விருந்து தொடக்கத்தில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பேசும்போது, “விஷ்ணுவின் சிலை அன்பு, பொறுப்புணர்வு, வீரம், தெயவீகத்தின் அடையாளம் ஆகும். ஒட்டு
மொத்த உலகமும், மனிதகுலமும் ஒற்றுமையாக வாழ வேண்டும்” என்றார்.
இந்து மதத்தை இந்தோனேசிய அரசு பெருமைப்படுத்தியது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டில் விமர்சனம்: ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இந்திய தலைமைக்கான கருப்பொருளையும் இலச்சினையையும் வெளியிட்டார். இதில் தாமரை இடம் பெற்றிருப்பதாக காங்கிரஸ் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.பாலி தீவின் கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டு பூங்காவில் கருட வாகனத்தில் அமர்ந்திருக்கும் பிரம்மாண்ட விஷ்ணு சிலை.