பொருளாதாரக் குற்றமுள்ள அரசாங்கத்துக்கு உதவி செய்ய சர்வதேசம் தயாரில்லை

123 0

அரசாங்கத்துக்கு 3 வீத மக்கள் ஆதரவே இருக்கின்றது. தேர்தல் ஒன்றை நடத்தினால் அதனை தெரிந்துகொள்ளலாம். அதனால் தேர்தலை நடத்தி மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும்.

அத்துடன் புதிய அரசாங்கம் ஒன்று வந்தால் ஆதரவளிப்பதாக சர்வதேச நாடுகள் தெரிவித்திருக்கின்றன. பொருளாதார குற்றம் செய்த இந்த அரசாங்கத்துக்கு சர்வதேசம் உதவி செய்ய தயார் இல்லை என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆரம்பத்திலேயே பாரிய நிறுவனங்களுக்கு 800மில்லியன் வரை வரி நிவாரணம் வழங்க தீர்மானித்தது.

ஆனால் இந்த தவறை அன்று அரசாங்கம் செய்யும்போது அரசாங்கத்தில் இருந்த எவரும் இதுதொடர்பில் கேள்வி கேட்கவில்லை.

அந்த தவறு காரணமாகவே எமது நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றுள்ளது. நாட்டை வங்குராேத்து செய்த அரசாங்கம் தற்போது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்திருப்பதுதான் நகைச்சுவையான விடயம்.

அரசாங்கத்துக்கு கெளரம் இருந்தால் பதவி விலகிச்செல்ல வேண்டும். நாடு வங்குராேத்து அடைந்திருப்பதையும் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு மறைத்தது.

நாட்டுக்கு புதிய அரசாங்கம் ஒன்று தேவை. புதிய அரசாங்கத்துக்கான தாகத்திலேயே மக்கள் இருக்கின்றனர். அரசாங்கத்துக்கு 3வீத மக்கள் ஆதரவே இருக்கின்றது. தேர்தல் ஒன்றை நடத்தினால் அதனை தெரிந்துகொள்ளலாம்.

அதனால் தேர்தலை நடத்தி மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும். அத்துடன் அரசாங்கம் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள உலகம் பூராகவும் பிச்சைக்கேட்டு திறிகின்றது.

ஆனால் எமது வங்கிகளில் கடன் பெற்றிருக்கும் விவசாயிகள் தொழிலாளர்களுக்கு கடன் மறுசீரமைக்க வங்கிகள் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடித்து வருகின்றன.

எமது நாட்டு வங்கிகள் மக்களிடமிருந்து பாரிய லாபத்தை பெற்று வருகின்றன. கடன் மறுசீரமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன் அரச நிறுவனங்கள் செயலிழந்துள்ளன. தனியார் துறையே எந்தவொரு நாட்டிலும் பொருளாதாரத்தை செயற்படுத்த வேண்டும்.

ஆனால் தனியார் துறைக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. ஏற்றுமதியாளர்களுக்கு நூற்றுக்கு 30வீத வரி விதிக்கப்பட்டிருக்கின்றது.

இது ஏற்றுமதியாளர்களை இல்லாமலாக்கும் நடவடிக்கையாகும். அதனால் நாட்டை கட்டியெழுப்ப அரச நிறுவனங்களை பலப்படுத்தி பயன் இல்லை.

இன்று தனியார் துறை வருமானம் பெற்றே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகின்றன. ஆனால் அரச நிறுவனங்கள் பணம் அச்சிட்டே சம்பளம் வழங்குகின்றன. அப்படியானால் நாட்டுக்கு ஒத்த்துழைப்பு வழங்குவது யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அத்துடன் தற்போது நாட்டில் வரிசைகள் இலலாமையால் அனைத்தும் சரி என அரசாங்கம் நினைத்துக்கொண்டிருக்கின்றது. ஏனெனில் அரசாங்கம் தற்போது கடன் செலுத்துவதி்ல்லை.

அதனால் அரசாங்கத்திடம் பணம் இருக்கின்றது.  மீண்டும் கடன் செலுத்த ஆரம்பித்தால் என்ன நடக்கும் என தெரியாது.

ஏனெனில் அரசாங்கத்துக்கு வருடத்துக்கு கடன் செலுத்துவதற்கும் ஏனைய அத்தியாவசிய செலவுகளுக்கும் 12 பில்லியன் டொலர் தேவைப்படுகின்றது.

ஆனால் அதனை எவ்வாறு தேடிக்கொள்வது என எந்த விடயங்களும் வரவு செலவு திட்டத்தில் இல்லை. 2025வரைக்கும் 12பில்லியன் டொலர் தேவைப்படுகின்றது. இந்த கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை.

ஆனால் புதிய அரசாங்கம் ஒன்று வந்தால், இந்த அரசாங்கத்தை விடவும் சர்வதேசத்தின் ஆதரவு கிடைக்கின்றது. ஏனெனில் இந்த அரசாங்கம் பொருளாதார மோசடி செய்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிகன்றது.

அவ்வாறு தெரிவிக்கும்போது சர்வதே நாடுகள் எமக்கு உதவுவதற்கு முன்வருமா என கேட்கின்றேன் என்றார்.