பாதீட்டின் பிரதான குறைபாடுகளை திருத்தாவிடின் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம்

134 0

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2404 மில்லியன் ரூபா பற்றாக்குறையை வரி அதிகரிப்பு ஊடாக சமனிலைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பாதீட்டின் பிரதான குறைப்பாடுகள் திருத்திக் கொள்ளப்படாவிடின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 15) இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கும்,முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பித்த 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்  திட்டத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் கிடையாது.

2023ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை என குறிப்பிட வேண்டும்.வரவு 2023ஆம் ஆண்டுக்கான மொத்த செலவு 5819 பில்லியன் ரூபாவாகவும்,மொத்த வருமானம் 3415 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச வருமானத்திற்கும், செலவிற்கும் இடையிலான பற்றாக்குறை 2404 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வரவு – செலவுத்  திட்டத்தின் 2404 பில்லியன் ரூபா பற்றாக்குறையை அரசாங்கம் எவ்வாறு நிவர்த்தி செய்யும், கடன் பெறல், வரி அதிகரித்தல் குறித்து மாத்திரம் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

வாழ்க்கை செலவு நாளாந்தம் பன்மடங்கு அதிகரித்துச் செல்கிற நிலையில் நாட்டு மக்களால் எவ்வாறு வரி செலுத்த முடியும். வரி அதிகரிப்பை மாத்திரம் அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளதை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் பொய் என்று குறிப்பிட வேண்டும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மருத்து பீடத்தை ஸ்தாபிக்க 200 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.