வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இதற்காக நாம் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் அவர் முதலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும்.
பாதுகாப்பு துறைக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ள இந்த வரவு செலவுத் திட்டம் யுத்தக் கால பாதீடாக காணப்படுகிறது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வினால் சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தமிழ் மக்களை முற்றாக ஏமாற்றியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்குமென 539 பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளதன் மூலம் இது ஒரு யுத்தகால வரவு செலவுத்திட்டம் போலவே உள்ளது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான எந்த அறிவிப்புக்களும் இதில் கிடையாது.
வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வு காணப்படுமென ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இத்தனை வரவேற்கின்றோம்.தற்போது வடக்கு ,கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வு காணும் நடவடிக்கையின் முதல் கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் நாம் அவருடன் தீர்வுக்காக இணைந்து பயணிக்க முடியும்.
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நீதி அமைச்சரால் விசேட செயலணி அமைக்கப்பட்டதுபோல் கிழக்கிலும் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட செயலணி அமைக்கப்பட வேண்டும். அரசும் அமைச்சர்களும் வடக்கையும் கிழக்கையும் ஒரே மாதிரியாகவே பார்க்க வேண்டும் என்றார்.