நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற சூழலில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதேபோன்று இலங்கைக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடிமிக்க காலகட்டத்தில் இலங்கையில் அரசியல் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் பாரியளவில் முக்கியத்துவம் அடைந்துள்ளன. குறிப்பாக ஏற்கனவே அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனூடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கின்றன.
இந்த பின்னணியில் புதியதொரு அரசியலமைப்பை கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதியதொரு அரசியலமைப்பை விரைவாகக் கொண்டு வர விருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் அறிவித்திருந்தது. அதேபோன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தின் ஊடாக கொண்டு வரப்படும் என்றும் அறிவித்திருந்தார். இதேவேளை புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அவேர்த்தனவும் அறிவித்திருந்தார். ஆனால் புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்பதே தமதுதரப்பு நிலைப்பாடு என்ற கருத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் என்ற விடயம் தற்போது பரவலாக வெளிப்பட்டு வந்தாலும் அது ஒரு சவால் மிக்க பயணமாக அமையும் என்பதனையும் புரிந்துகொள்ளவேண்டும். காரணம் தற்போது காணப்படுகின்ற அரசியலமைப்பு 21 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் தொடர்ந்து அதனை திருத்திக் கொண்டிருக்காமல் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதே பொருத்தமான தெரிவாக அமையும் என்பது இலங்கையின் அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் யோசனைகளாக காணப்படுகின்றன.
ஆனால் இலங்கையில் தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமாயின் கடந்த காலங்களில் புதிய அரசியலமைப்புக்குள் உருவாக்கப்பட்ட போது விடப்பட்ட தவறுகள் மீண்டும் செய்யப்படாமல் அந்த தவறுகளிலிருந்து பாடங்களை கற்று புதிய அரசியலமைப்பை சகல மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலும் அவர்களது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலும் உருவாக்க வேண்டும். இந்த விடயமும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் இடம் பெறக்கூடாது என்பது மிக முக்கியமானதொரு விடயமாக அமைந்திருக்கிறது.
இலங்கையில் தற்போது இரண்டாவது குடியரசு யாப்பே அமுலில் இருக்கிறது. 1947 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு கொண்டுவரப்பட்டு டொமினியன் அஸ்தஸ்துடன் நாடு ஆட்சிசெய்யப்பட்டது. அதில் பிரதிநிதிகள் சபையும் செனட் சபையும் காணப்பட்டன. செனட் சபையில் 30 உறுப்பினர்கள் இடம்பெற்றதுடன் அதில் 15 பேர் பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியாக இலங்கையில் இருந்த ஆளுநரால் நியமிக்கப்பட்டன. பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்படுகின்ற எந்தப் பிரேரணையும் செனட் சபையிலும் நிறைவேற்றப்படவேண்டும். அதன் பின்னர் 1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பு கொண்டுவரப்பட்டது. அதில் டொமினீயன் அந்தஸ்து முறை நீக்கப்பட்டு இலங்கை முழுமையாக குடியரசாகியது. ஆனால் அதில் செனட் சபை முறையும் அகற்றப்பட்டதுடன் பெயரளவிலான ஜனாதிபதி முறை கொண்டுவரப்பட்டது. இதில் இறுதியாக 1977 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உள்ளடக்கி திருத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி முறையை திசைமுகப்படுத்தியதாக இரண்டாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது. அதுவே தற்போது அமுலில் இருக்கிறது. அந்த இரண்டாவது குடியரசு யாப்பில் 21 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நிறைவேற்று அதிகாரங்களை கூட்டியும் குறைத்தும் திருத்தங்கள் செய்யப்பட்டன. 17, 18, 19, 20, 21 என திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியிலேயே புதிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும் என்ற விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாயின் கடந்த முப்பதுவருட காலப்பகுதியில் இலங்கையில் பல தடவைகள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரைபுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வரைபுகளை மையப்படுத்தி புதிய அரசியலமைப்பை ஒரு மாத காலத்தில் உருவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த டலஸ் அணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புதிய அரசியலமைப்பு முறையை உருவாக்குவது கடினமான விடயமல்ல. ஏற்கனவே 1995, 1997, 2000, 2018 ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு குறித்தவரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தி ஒரு மாதகால காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 1947ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பு 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பு மற்றும் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பு ஆகியவற்றின் உருவாக்கத்தின் போது இலங்கையின் சிறுபான்மை மக்களின், தமிழ் பேசுகின்ற மக்களின் பங்களிப்புகள் உள்ளடக்கப்படவில்லை என பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மூன்று அரசியலமைப்பு உருவாக்கங்களின் போதும் சிறுபான்மை மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்க வில்லை என்ற விடயம் பலமான முறையில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
எனவே அந்த குற்றச்சாட்டுகளுக்கு இனியும் இடம் வைக்காமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது சகல தரப்பு மக்களினதும் உள்ளடக்கங்களும் பங்களிப்புகளும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
சோல்பரி அரசியல் யாப்பில் 29/2 என்ற ஒரு பிரிவு கொண்டுவரப்பட்டது. அதனூடாக சிறுபான்மை மக்களுக்கு எந்தவிதமான அநீதியும் இடம்பெறுவது தடுக்கப்பட்டது. அதாவது சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது அநீதி இடம்பெறுமாயின் 29/2 என்ற சோல்பரி யாப்பின் பிரிவு அதை தடுத்து நிறுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கும். ஆனால் அந்த 29/2 என்ற பிரிவு இருந்தபோதுதான் இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதுடன் இந்திய வம்சாவளி மக்கள் குறித்த பிரஜாவுரிமை விவகாரமும் கொண்டுவரப்பட்டது.
அந்த சந்தர்ப்பங்களில் 29/2 என்ற பிரிவினால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை தடுத்து நிறுத்தமுடியவில்லை. எனவே சோல்பரி யாப்பும் கூட சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் பொதுவான கருத்தாக காணப்படுகிறது.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பானது அவ்வாறு கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளிலிருந்து பாடங்களை கற்று சகல மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் ஜனநாயக கட்டமைப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அது இலகுவான காரியமல்ல. இலங்கை போன்ற பல்லின பல்கலாசார, பல்மொழி பேசுகின்ற நாடொன்றில் வாழும் சகல மக்களினதும் அபிலாசைகளையும் உறுதிப்படுத்தி ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது என்பது மிகவும் ஒரு நெருக்கடியான மற்றும் சவால்மிக்க விடயமாகவே காணப்படுகிறது.
முக்கியமாக தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வில் அமைந்த ஒரு தீர்வுத் திட்டம் இல்லாது அரசிலயமைப்பு கொண்டுவரப்பட்டால் அதனை தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோன்று ஒரு அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டம் உள்ளடக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அது தென்னிலங்கை கடும்போக்காளர்களினால் கடுமையாக எதிர்க்கப்படும். எனவே இந்த இரண்டு தரப்பினரையும் சமாளித்து ஒரு நடு நிலைமையில் அரசியலமைப்டிப கொண்டு வருவது என்பது மிகவும் ஒரு கடுமையான சவாலான விடயமாகவே இருக்கும்.
அதனை சமாளித்து இரண்டு தரப்புக்கும் விளக்கங்களை அளித்து விடயங்களை எடுத்துக் கூறி புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியுமாயின் அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கின்ற மிகப்பெரிய வெற்றியாக அமையும்.
அரசாங்கமானது கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளிலிருந்து பாடங்களை கற்று அவ்வாறான தவறுகளை மீண்டும் இழைக்காமல் சகல மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சகல இன மக்களினதும் அரசியல் அபிலாசைகள் உறுதிப்படுத்தப்படுவதுடன் எந்தவொரு இனத்திற்கும் எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி இடம்பெறாத வகையில் ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும்.
அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டை ஆட்சி செய்கின்ற நாட்டைப் உலகத்துக்கு காண்பிக்கின்ற நாட்டு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற ஒரு மிக முக்கியமான ஏற்பாடாகவும் ஆவணமாகவும் காணப்படுகிறது. எனவே அது சகல தரப்பு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தாகவும் இலங்கையின் பல்லினத்தன்மை பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாகவும் அமைய வேண்டும். அதனூடாகவே இலங்கை அடுத்த கட்டத்தை நோக்கி சர்வதேச மட்டத்தில் நகர முடியும்.
எனவே மிகவும் சவாலானதாக காலகட்டத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சிகளும் அறிவித்திருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை தலைமைகள் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றன என்பதே இங்கு முக்கியமாகும். இவை தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில் எவ்வாறு புதிய அரசியலமைப்பு வரப்போகிறது என்பதே இங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. இதனை இலங்கை மக்கள் மட்டுமன்றி முழு சர்வதேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கம் இதில் எவ்வாறு இராஜதந்திர அணுகுமுறையை மற்றும் பரந்துபட்ட ரீதியிலான செயற்பாட்டை முன்னெடுக்கப் போகின்றது என்பது இங்கு சகலரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.