இவ்வருட இறுதிக்குள் பலாலி விமான நிலைய சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
காங்கேசன் துறைமுகம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் காங்கேசன் துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டதோடு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
குறித்த விஜயத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி தந்த காங்கேசன் துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை இவ்வாறான சம்பவங்கள் மூலமே எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீள வேண்டுமே ஆக இருந்தால் காங்கேசன் துறை போன்ற பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை நாங்கள் மீள புதுப்பித்து அவற்றை செயல்படுத்துவதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும். தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த வேலை திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
அதன் காரணமாகவே இன்றைய தினம் காங்கேசன் துறைமுகத்திற்கு நேரடியாக அமைச்சர் என்ற ரீதியில் நான் விஜயத்தினை மேற்கொண்டு இங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் நான் ஆராய்ந்து இருக்கின்றேன்
குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம் . ஏற்கனவே நாங்கள் இந்திய நாட்டின் உதவியுடன் சில வேலை திட்டங்களை இங்கே முன்னெடுத்து இருக்கின்றோம்.
ஆனால் இங்கே பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன அவ்வாறான வேலை திட்டங்களை விரைவில் ஆரம்பித்து மிக விரைவில் இந்த காங்கேசன் துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம்.
அதேபோல் பலாலி சர்வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையமாகும். அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும்.
குறிப்பாக அமைச்சின் ஒருவர் இந்தியா தான் அந்த விமான நிலையத்தினை செயல்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக ஊடகவியலாளர் வினவிய போது, அது முதலில் அவ்வாறு பிரச்சினை இருந்தது ஆனால் எல்லாம் பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டு தற்பொழுது எல்லா விடயங்களும் நிறைவடைந்து விட்டன. ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அவ்வாறு ஆரம்பித்தால் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவித்தார். ஆனால் இவை விரைவில் சாத்தியப்பட வேண்டும் என இறைவன் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.