படு ஸ்லோவாக இயங்கிய ட்விட்டர்: பயனாளர்களிடம் மன்னிப்பு கோரிய எலான் மஸ்க்

168 0

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைவர் எலான் மஸ்க் பயனாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ட்விட்டர் சமூகவலைதளம் மிகவும் குறைந்த வேகத்தில் இயங்குவதாக புகார்கள் எழுந்த நிலையில் மஸ்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.

முன்னதாக எலான் மஸ்க் தான் அறிவித்த மிகவும் முக்கியமான மாற்றம் 8 டாலர் வெரிபிகேஷன் திட்டத்தை திரும்பப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். 8 டாலர் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில் பிரபலங்களின் பெயரில் போலியான கணக்குகள் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்தது இதனால் இத்திட்டம் தற்காலிமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் இது மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் அந்நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70% வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள்.

இந்நிலையில், ட்விட்டர் தளம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் குறைந்த வேகத்தில் இயங்குவதாக புகார் வந்த நிலையில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.