பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, பெண் சீடர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்கில் கடந்த 2010-ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா கர்நாடகா மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தாவுக்கு தலைமறைவானார். இந்த வழக்கின் விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து ராம்நநகர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவான நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றினார். கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.77-வது பொதுச்சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நாவுக்கான தூதராக நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. கைலாசா எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கே இதுவரை விடை கிடைக்காத நிலையில் இப்போது அங்கே வேலை வாய்ப்பு உள்ளதாக வெளி வந்துள்ள ஒரு விளம்பரம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கைலாசாவில் பிளம்பிங் வேலை முதல் கணினி தொழில்நுட்ப பணிவரை தகுதிக்கேற்ப வேலை உள்ளது என்றும், தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி என அத்தனையும் இலவசம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே ஆன்மிக பயிற்சியும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து இணையத்தில் நித்தியானந்தா சீடர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. வேலை வேண்டுவோருக்கு முதலில் கர்நாடகா மாநிலம் பிடதி ஆசிரமத்தில் தகுதிக்கேற்ப வேலை அளிக்கப்படும் என்றும் அவர்களது திறமையை பொறுத்து கைலாசாவிற்கே வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த நபர் தெரிவிக்கிறார். இந்த நிலையில் கைலாசா வேலை வாய்ப்பு விளம்பரம் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.