24 மணி நேரத்தில் 23,060 மரக் கன்றுகளை நட்டு இளைஞர் சாதனை: வைரலான வீடியோ

120 0

எகிப்தில் ‘காப் 27’ காலநிலை மாற்றம் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கனடாவை சேர்ந்த மாரத்தான் வீரர் 24 மணி நேரத்தில் 24,000 மரங்களை நட்டு சாதனை புரிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

15 நொடிகள் கொண்ட இந்த வீடியோவை, நார்வேயைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் எரிக் சோல்ஹைம் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், “ 23 வயதான இளைஞர் அன்டோயின் மோசஸ் புதிய சாதனையை படைத்திருக்கிறார். கடந்த 24 மணி நேரத்தில் 23,060 மரங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு நிமிடத்தில் சுமார் 16 மரங்களை இந்த இளைஞர் நட்டிருக்கிறார். அதாவது 3.75 நொடியில் ஒரு மரக்கன்றை அவர் நட்டிருக்கிறார்” என்று பாராட்டி உள்ளார்.

அன்டோயின் மோசஸ் இந்த கின்னஸ் சாதனையை 2021 ஆம் ஆண்டு நிகழ்த்தி இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக மோசஸ் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டி மரங்களை நட்டு வருகிறார். இதற்கு முன்னர் 24 மணி நேரத்தில் 15,000 மரக்கன்றுகளை நட்டதே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த நிலையில் இந்த சாதனை மோசஸால் கடந்த ஆண்டு முறியடிக்கப்பட்டது.

காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பெரும் வெள்ளம், புயல், அதீத மழையினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் ஆர்டிக், அண்டார்டிக்கா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.