சொகுசு கப்பலில் 800 பேருக்கு கரோனா: ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவுகிறது

142 0

ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக ஒமைக்ரான் எக்ஸ்பிபி வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது 4-வது அலை என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், கார்னிவல் ஆஸ்திரேலியா நிறுவனத்துக்கு சொந்தமான மெஜஸ்டிக் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் பயணித்த 800 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தக் கப்பல் சிட்னி அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கார்னிவல் ஆஸ்திரேலியா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் கரோனா தொற்று உறுதி செய்யப்படாதவர்கள் கப்பலில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு ரூபி பிரின்சஸ் சொகுசு கப்பலின் பயணிகள் 914 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 28 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை மெஜஸ்டிக் பிரின்சஸ் கப்பலுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

 

இதுகுறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ நீல் கூறும்போது, “கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.