முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளன் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த கடந்த கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதேபோல் மற்ற 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பட்டதை அடுத்து மதுரை சிறையில் இருந்து ரவிச்சந்திரனும் விடுதலையானார்.
சிறைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், துயரம் தனக்கானது என்றும், மகிழ்ச்சி, தமிழ் கூறும் நல் உலகம் அனைவருக்குமானது என்றும் கூறினார். ஏழு பேர் விடுதலைக்காக உயிர் நீத்த செங்கொடி தியாகத்தை நினைவு கூறுவதாக அவர் தெரிவித்தார்.
நீண்ட நெடிய வழக்கு முற்றுப் பெற்று ஏழு பேரும் விடுதலையாக காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.