வள்ளுவனின் குரலுக்கமைய பண்பு, நேர்த்தி, நேர்மை உள்ளிட்ட நற்குணங்களுடன் முன்னுதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, அரசியலிலும் கல்வித்துறையிலும் சமூக சேவையிலும் அனைவரும் மெச்சத்தக்க சேவை செய்த மகானாக அமரர் துரை ரட்ணசிங்கத்தை குறிப்பிட முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவிக்கிறார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரை ரட்ணசிங்கம், சந்திரகுமார விஜய குணவர்த்தன, ரீ.பி. ஏக்கநாயக்க மற்றும் பத்தேகம சமித்த தேரர் ஆகியோருக்கான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
துரை ரட்ணசிங்கம் என்ற மாமனிதரின் ஆளுமை வித்தியாசமானது. வேட்டி சால்வையுடன் நேர்த்தியாக உடுத்தி வருபவர் என்பது மட்டுமல்ல, அவரது ஒவ்வொரு செயற்பாடுகளிலும் நேர்த்தியும் நேர்மையும் காணப்பட்டது.
ஓர் ஆசிரியராக, அதிபராக, வலயக்கல்வி பணிப்பாளராக, பாராளுமன்ற உறுப்பினராக சமூகத்துக்கு சிறந்த சேவையாற்றி இற்றை வரை பலராலும் மெச்சப்படுகின்ற மனிதராக அவரை குறிப்பிட முடியும்.
கல்வித்துறைக்கு பெரும் சேவையாற்றிய அவரின் அரசியலுக்கான வருகை ஒரு விபத்தாகவே இடம்பெற்றது என்று கூறலாம்.
சிலர் ஆசைப்பட்டு, பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு அரசியலுக்கு வருவர். துரை ரட்ணசிங்கம் அவ்வாறான ஒருவர் அல்லர். தலைமைகளால் அழைக்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். சேனையூர் வித்தியாலயத்தில் ஆசிரியராக, அதிபராக சிறந்த பணி புரிந்தவர்.
யுத்தம் நடைபெற்ற காலங்களில் மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தார். சமூக சேவைகளை மேற்கொண்ட சிறந்த மனிதர் அவர்.
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற ஒரு சமயத்தில் யாரோ இனந்தெரியாதவர்கள் மூதூர் 3ஆம் கட்ட மலையிலே சிலுவையொன்றை அடித்து நொறுக்கிய சம்பவம் இடம்பெற்றது.
அதனை முஸ்லிம் சமூகத்தினரே செய்தனர் என நினைத்து இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினைகள் உருவாக இருந்த சந்தர்ப்பத்தில், மிக அமைதியாக அதை கையாண்டு மக்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
அதன்போது நான் தொலைப்பேசி மூலம் அவரோடு தொடர்புகொண்ட தருணம் “நீங்கள் பயப்படாமல் வாருங்கள்” என்று எனக்கு அழைப்பு விடுத்தார்.
அங்கு வருகை தந்திருந்த அப்போதைய மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை முன்னிலையில் அப்பிரதேச மக்கள் மிகவும் கோபத்துடன் செயற்பட்டு, நான் ஏன் அங்கு அழைக்கப்பட்டேன் என்பது தொடர்பில் வித்தியாசமாக எம்மை நோக்கிய சந்தர்ப்பத்திலும் எந்த சிக்கல்களும் இல்லாமல் நிலைமையை சிறப்பாக கையாண்டு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமைக்கு வழி வகுத்த மனிதராக அமரர் துரை ரட்ணசிங்கத்தை பார்க்க முடியும்.
‘நல்ல பண்புள்ளோர் வாழ்வதால் தான் உலகம் வாழ்கிறது. இல்லையென்றால், உலகம் அழிந்துவிடும்’ என்பான் வள்ளுவன்.
அதற்கிணங்க பலருக்கு மிக முன்னுதாரணமாக வாழ்ந்தவர் அவர். ஆரவாரம் இல்லாத அரசியல் செய்த பண்புடையவராக நண்பர் துரை ரட்ணசிங்கத்தை பார்க்க முடியும்.
மூன்று தடவைகள் பாராளுமன்றத்தை அலங்கரித்த பெருமகன்.
ஈழப் போரின் நான்கு கட்டங்களிலும் மூதூர் கட்டைப்பறிச்சான் உள்ளிட்ட அதனை அண்டிய பிரதேசங்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்தபோது அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் அவர்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்கள் தொண்டில் சிறப்பாக ஈடுபட்டவர் என்றால் அது மிகையாகாது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய திருகோணமலை மாவட்டம் மட்டுமன்றி, நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பிரார்த்திக்கிறேன் என்றார்.