” இந்திய வம்சாவளி தமிழர் அல்லது மலையகத் தமிழர் என்ற அடையாளத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அடையாளத்தை தொலைத்தால் அந்த இனம் அழிந்துவிடும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாரி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், இது தொடர்பில் வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம். இந்த முயற்சியின் ஊடாக தீர்வு காணப்பட்டால் நிச்சயம் அது பாராட்டக்கூடிய விடயமாக அமையும்.
மலையக தமிழர்கள் இலங்கை வந்து, அடுத்த வருடத்துடன் 200 வருடங்கள் ஆகின்றன. எமது மக்களின் பிரச்சினைகள் ஆமை வேகத்தில்தான் தீர்க்கப்பட்டு வருகின்றன. உரிமைகள்கூட பல வருடங்களுக்கு பிறகுதான் கிடைக்கப்பெற்று வருகின்றன. எனவே, மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது குறித்து எம்மையும் அழைத்து ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும்.
மலையக மக்களும் இலங்கையர்கள் தான் என்ற வாதம் தவறில்லை. அதற்காக மலையக தமிழர் அல்லது இந்திய வம்வாவளி தமிழர் என்ற அடையாளத்தை நாம் இழந்துவிடக்கூடாது. அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தன்னை இந்திய வம்சாவளி என அடையாளப்படுத்துகின்றார். இங்கிலாந்து பிரதமர் ரிஷியும் அப்படிதான். அதேபோல அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா தன்னை ஆபிரிக்க வழிவந்தவர் என காட்டிக்கொள்வதில் தயங்குவதில்லை.
இந்திய வம்வாவளி மக்களின் அடையாளமாகவே இலங்கை ,இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானும் இருந்தார். எனவே, அடையாளத்தை தொலைத்துவிடமுடியாது. ” என்றார்.