இலங்கையில் எம்மால் வாழ முடியாது. எமது சொத்துக்கள் அனைத்தையும் நாம் இழந்துள்ளோம். எனவே எம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது. எம்மை ஐ.நா.விடம் ஒப்படைத்து விடுங்கள் என்று பிலிப்பைன்ஸ் – வியட்நாம் கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இலங்கையர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கடற்பரப்பில் சுமார் 303 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் பழுதடைந்த நிலையில் மூழ்கும் நிலையில் உள்ளதாக வழங்கப்பட்ட தகவலையடுத்து அக்கப்பலிலிருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
மீட்கப்பட்ட அனைவரும் தற்போது வியட்நாமில் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ள போதிலும் , தாம் மீண்டும் இலங்கைக்கு திரும்ப விரும்பவில்லை என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
வியட்நாமிலுள்ள முகாமொன்றிலிருந்து காணொளி ஒன்றை பதிவிட்டு , அதன் மூலம் அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையிலிருந்து கப்பல் ஊடாக வருகை தந்த எம்மை நடுக்கடலில் தத்தளிக்க விட்டு , எம்மை அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இப்போதும் நாம் வியட்நாம் முகாமிலிருக்கின்றோம். சர்வதேசக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த எம்மை ஜப்பான் நாட்டு கப்பலே காப்பாற்றியது. எம்மை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதாக அவர்கள் கூறிய நிலையிலேயே , வியட்நாம் கடற்படையினர் எம்மை இங்கு அழைத்து வந்துள்ளனர்.
இலங்கையில் எம்மால் வசிக்க முடியாது. அங்கிருக்க முடியாது என்பதன் காரணமாகவே நாம் நாட்டிலிருந்து வெளியேறினோம். எமக்கு இலங்கை வேண்டாம். சர்வதேச நாடுகள் இணைந்து எம்மை காப்பற்ற வேண்டும் என்று கோருகின்றோம். நாம் எமது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விட்டோம். எனவே எம்மால் அங்கு சென்று வாழ முடியாது.
உயிருக்காக போராடிக் கொண்டிருந்த எம்மை காப்பாற்றிய ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அதே போன்று எம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு அனுமதிக்காதீர்கள். உலகத் தமிழர்கள் அனைவரும் எமக்காக ஒத்துழைத்து கைகொடுக்க வேண்டும் என்றனர்.