ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை மையப்படுத்திய விவகாரத்தில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய இருவரினதும் குறைப்பாடுகள் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (11) ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறியமை உளிட்ட கடந்த ஜூலை 9 ஆம் திகதி நடந்த சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு இதனை கோட்டை நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தவறுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு பரிந்துரைகளை அரச சேவை ஆணைக் குழுவுக்கு வழங்கியுள்ளதாக குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை, அரசியல்வாதி ஒருவருக்கு கையளிக்க, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகேவுக்கு கட்டளையிட்டதாக கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.