ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறியமை சட்டத்தரணி போப்பகே 59 ஆவது சந்தேகநபர்

101 0

கொழும்பு கோட்டை ஜனாதிபதி  மாளிகைக்குள் அத்து மீறி, அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறி கோட்டை நீதி மன்றில்   முன்னெடுத்து செல்லப்படும் வழக்கில் 59 ஆவது சந்தேக நபராக  சிரேஷ்ட சட்டத்தரணி நுவன் போப்பகேயை பெயரிடுவதாக பொலிஸார்  அறிவித்துள்ளனர்.

இன்று (11) இந்த விவகார வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஜனாதிபதி  மாளிகைக்குள் அத்து மீறி அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக தெரிவித்து, குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியகம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி 71 பேரை அடையாளம் காண பொலிஸ் ஊடகப் பிரிவூடாக ஊடகங்களில் புகைப்படங்களும் பிரசுரிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மன்றில் ஆஜரான விசாரணை அதிகாரிகள் சம்பவத்தின் 59 ஆவது சந்தேக நபராக சட்டத்தரணி நுவன் போப்பகேயை பெயரிடுவதாக அறிவித்தனர்.

இதற்கு முன்னர் இவ்விவகாரத்தில் 58 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.