கடந்த 2009-ம் ஆண்டு டென்மார்க் தலைநகர்கோபன்ஹேகனில் நடந்த ஐ.நா. பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் (சிஓபி) பருவநிலை மாற்ற பாதிப்புகளை சமாளிப்பதற்கு உதவ, 2020-ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி நிதி திரட்ட வளர்ந்த நாடுகள் ஒன்றாக இணைந்து உறுதியளித்தன. ஆனால் இந்த நிதியை வளர்ந்த நாடுகள் தொடர்ந்து தரவில்லை.
உலகளாவிய பருவநிலை நிதிக்கான புதிய நிதி இலக்கை அடைய வளர்ந்த நாடுகளை, இந்தியா உட்பட வளரும் நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்தாண்டு சிஓபி27 மாநாடு எகிப்து நாட்டின் ஷாம் எல்-ஷேக் நகரில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இதில் இந்திய குழு நேற்று முன்தினம் கூறியதாவது:
பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வளர்ந்த நாடுகளிடம் இருந்து நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவு தேவை என்பதை மக்கள் நன்கு அறிவர். வளர்ந்த நாடுகள் உருவாக்கிய இலக்குகளை அடைய, பருவநிலை மாற்றத்துக்கான நிதியை ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடியிலிருந்து அதிகரிக்க வேண்டும். இந்த நிதி ஆதாரங்களை திரட்ட வளர்ந்த நாடுகள் முன்னணி வகிக்க வேண்டும். பருவநிலை மாற்ற பாதிப்புகளை தணிப்பதற்கான திட்டங்களுக்கு வளர்ந்த நாடுகளின் ஆதரவு நீண்ட காலத்துக்கு இருக்க வேண்டும். இவ்வாறு இந்தியா கூறியது.