“உரிமைகளுக்காக எந்த விலையும் கொடுப்பேன்” – ஹிஜாப் துறந்து பதிவிட்ட ஈரானின் பிரபல நடிகை

116 0

 ஈரானின் பிரபல நடிகையான தாரனே அலிதூஸ்டி ஹிஜாப் அணியாமல் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு போராட்டாக்காரர்களுக்கு தனது ஆதரவை வழங்கியிருக்கிறார்.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமாகியுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் பிரபல நடிகை தாரனே அலிதூஸ்டி ஹிஜாப் இல்லாமல் தனது புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு போராட்டாக்காரர்களுக்கு ஆதரவை வழங்கி இருக்கிறார். புகைப்படத்தை பதிவிட்டு அதில் அவர், “நான் இங்குதான் இருக்கிறேன். இங்கிருந்து வெளியே செல்லமாட்டேன். நான் எனது பணியை நிறுத்திவிட்டு இப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் ஆதரவாக இருக்கப் போகிறேன். நான் அவர்களுக்காக வாதாட போகிறேன்.

நான் எனது தாய் நாட்டுக்காகப் போராடுவேன். எனது உரிமைகளுக்காக நிற்க நான் எந்த விலையையும் கொடுப்பேன். முக்கியமாக, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.