ராகிங்கில் ஈடுபட்ட புகார்: சிஎம்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

110 0

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் சிலர் அரை நிர்வாணமாக ஓட விட்டு ராகிங் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை, ட்விட்டர் வலைதளத்தில் சிலர் பதிவேற்றம் செய்து ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகிர்ந்துள்ளனர்.

மேலும், ராகிங் சம்பவம் தொடர்பான புகாரை புது தில்லியில் உள்ள ராகிங் தடுப்பு குழுவுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் மின்னஞ்சல் வழியாக பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ளார். அந்த புகாரில் பாலியல்ரீதியாகவும் நடித்துக் காட்டச் சொல்லி மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதன் தொடர்ச்சியாக, ராகிங் சம்பவத்தில் தொடர்புடைய7 சீனியர் மாணவர்களை சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், கல்லூரி தரப்பில் இருந்து அமைக்கப்பட்டுள்ள 6 நபர் குழுவினரும், கல்லூரியின் ராகிங் தடுப்பு குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகிங் தடுப்புச் சட்டம்: இதற்கிடையில், சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார், கல்லூரி விடுதி வளாகத்தில் நடைபெற்ற ராகிங் தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், தமிழ்நாடு ராகிங் தடுப்புச் சட்டம் 1997-ன் படி 7 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எஸ்.பி., விளக்கம்: இதுகுறித்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: சி.எம்.சி கல்லூரியில் நடைபெற்ற ராகிங் தொடர்பாக ராகிங் தடுப்பு குழு 72 மணி நேரத்துக்குள் விசாரணை நடத்தி மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் அறிக்கை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கல்லூரி முதல்வர் காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளார். நாங்கள் புகாரை பெற்ற 24 மணி நேரத்துக்குள் 7 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.