ஆளுநரை திரும்பப் பெறக்கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள், குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள மனு குறித்து, பா.ஜ.க. மகளிர் அணியின் தேசிய தலைவரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆளுநர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவராக இருக்கலாம், ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதிதான் ஆளுநர். திருக்குறளை ஆங்கிலத்தை மொழி பெயர்த்த கிறிஸ்தவ பாதிரியார் ஜி.யு.போப், அதிலுள்ள ஆன்மீகம் என்ற ஆன்மாவை தவிர்த்து விட்டார் என ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த விமர்சனத்திற்காக கொந்தளிக்கும் திமுகவினர் திருக்குறள் பற்றி பெரியார் கூறியதை ஒருமுறை படித்துக் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதன்படியே அவர் பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். அதில் தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லையெனில், ஜனநாயக ரீதியாக கருத்துக்கு கருத்து என்ற வகையில் பதில் அளிக்கலாம். அதை விடுத்து ஆளுநரை பதவியில் இருந்து நீக்குமாறு கோருவதன் மூலம், தி.மு.க.விற்கு ஜனநாயக வழியிலான கருத்து பரிமாற்றத்தில் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.
திமுக அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக சட்டத்தை மீறும் போது, பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதைக் கூட வாக்கு வங்கி அரசியலுக்காக மறைக்க முயலும் போதும், மாநில அரசை தட்டிக் கேட்கும் கடமை பொறுப்பில் ஆளுநர் இருக்கிறார். கடமையை செய்தவரை எதற்காக பதவியில் இருந்து நீக்க வேண்டும்? திமுக அரசு தனது விருப்பம் போல் செயல்படமுடியவில்லை.
திமுக அரசின் தவறுகளையும், எல்லா உண்மைகளையும் ஆளுநர் கண்டுபிடித்து விடுகிறார். அதனை மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமருக்கு உடனுக்கு உடன் சொல்லி விடுகிறார் என்ற வருத்தம் இருக்கலாம். அதனால் திமுகவினருக்கு இழப்பும் ஏற்பட்டிருக்கலாம். அதனால் அவரை நீக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.