தேசிய பாடசாலைகளாக பிரகடனப்படுத்திய பாடசாலைகள் முதன்மை பாடசாலைகளாக மாற்றப்படும்

96 0

தேசிய கல்வி ஆணைக்குழுவின் தேசிய கல்வி கொள்கைத்திட்டத்துக்கு அமைய தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ள பாடசாலைகளை முதன்மை பாடசாலைகள் என்று மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய தேசிய பாடசாலைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தேசிய கல்வி கொள்கைத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. இதன்படி 2023 -2033 ஆண்டுக்காக 10 வருட தேசிய கொள்கைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டே  கல்வி மறுசீரமைப்பு நடக்கும். ஆயிரம் தேசியப் பாடசாலைகளில் தேசிய என்ற பெயர் குறிப்பிட்டு பயனில்லை. அவற்றை தேசிய மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும்.

தேசியப் பாடசாலைகள் என்று பதாதைகளை போட்டவர்களிடம் அது தொடர்பான பிரச்சினைகளை கேட்டுக்கொள்ளுங்கள். அதில் தான் தொடர்பில்லை. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை முதன்மை பாடசாலைகளாகும்.

எவ்வாறாயினும் 1200 பாடசாலைகள் திட்டத்தில் தற்போதைய தேசியப் பாடசாலைகளும் உத்தேச தேசிய பாடசாலைகளுக்குமே முதன்மை பாடசாலை அந்தஸ்து வழங்கப்படும்.

இதன்படி அடுத்துவரும் வாரங்களில் மாகாண மட்டத்தில் உறுப்பினர்களை அழைத்து தயாரித்துள்ள கொள்கைத் திட்டத்திற்கு இணக்கப்பாடுகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டு வந்து அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.