நீதிமன்ற வழக்கில் உள்ள விடயங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை நீதிமன்றம் ஊடாக தடை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.
பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கு விடயத்தில் ஊடகங்கள் மிக மோசமாக நடந்து கொள்கின்றன என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சிறுவர், பெண்கள் தொடர்பான துஸ்பிரயோக வழக்குகளை விசாரணை செய்வதற்கு பிரத்தியேக நீதிமன்றம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நீதி தொடர்பான சட்டமூலங்கள் குறித்த திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்னவின் உரைக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
நீதியமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கையை பொறுத்தவரை சிறுவர், பெண்கள் துஸ்பிரயோக வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. எனக்கு முன்னர் பதவி வகித்த நீதியமைச்சர்கள் கூட இவ்வாறான வழக்குகளை துரிதமாக நிறைவு செய்ய கடின முயற்சிகளை எடுத்த போதும், அதில் முழுமையான வெற்றிப் பெறவில்லை.
ஆகையினால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சிறுவர், பெண்கள் தொடர்பான துஸ்பிரயோக வழக்குகளை விசாரணை செய்வதற்கு பிரத்தியேக நீதிமன்றம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
இதேவேளை வெளிநாடுகளை பொறுத்தவரை ஒரு வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது அது தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாது என ஊடகங்களுக்கு தடை விதிக்கும் விதிமுறை உள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இலங்கை ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பான செய்திகளை வெளியிட கூடாது என சிட்னி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இவ்வாறான உத்தரவு மூலம் 22வருடத்திற்கு மேலாக அந்த வழக்குகள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
அதேபோன்று இலங்கையிலும் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட தடை விதிப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஏனெனில் இலங்கையில் சிறுவர், பெண்கள் துஸ்பிரயோக சம்பவங்களில் ஊடகங்கள் மிக மோசமாக நடந்துக்கொள்கின்றன. இதனை சட்டத்தின் ஊடாக தடுக்க முடியும்