வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் 01ஆம் திகதி இடம்பெற்ற இவ்விபத்தில் சச்சினி கலப்பத்தி எனும் 23 வயதான மாணவி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இவர் தங்காலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பேராதனை பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவியுடன் பயணித்த மேலும் இரு மாணவிகளும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் தற்போது குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
குறித்த மூன்று மாணவிகளும் பல்கலைக்கழகத்திலிருந்து ஹில்டா ஒபேசேகரவிலுள்ள தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, கார் ஒன்று மோதியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.