சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் ஜெர்மன் அரசிடம் ஒப்படைப்பு?

98 0

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த சிலைகள், கலை பொக்கிஷங்களை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லக் கூடாது என மத்திய அரசு 1972-ல் சட்டம் இயற்றியது. ஆனால், அதையும் மீறி இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து ஏராளமான பழமை வாய்ந்த சிலைகள், கலை பொக்கிஷங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன.

இதுகுறித்து தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில்,பெரும்பாலான சிலைகள் கடத்தப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டது அமெரிக்க குடியுரிமை பெற்ற சுபாஷ் சந்திர கபூர்(73) என்பது தெரியவந்தது. வெளிநாடுகள் மட்டுமின்றி, தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சிலை கடத்தல் வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இது ஒருபுறம் இருக்க சுபாஷ் கபூரை சர்வதேச போலீஸாரும் தேடி வந்தனர்.

பிரபல கலைப்பொருட்கள் வியாபாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுபாஷ் கபூர், அமெரிக்காவில் கலைப்பொருள் விற்பனை மையத்தை நடத்தி வந்தார். கடத்தி கொண்டு வரப்படும் பெரும்பாலான சிலைகள் இங்கிருந்தே ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2011 அக்டோபரில் சர்வதேச இன்டர்போல் போலீஸார் உதவியுடன் ஜெர்மனியில், அந்நாட்டு போலீஸார் சுபாஷ் கபூரைக் கைது செய்தனர். பின்னர், அவரை தமிழக போலீஸார், தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக இந்தியா கொண்டுவர கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 2012-ல் சுபாஷ் கபூர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலையத்தில் 2008-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகவே சுபாஷ் கபூரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்திருந்தனர். ரூ.94 கோடி மதிப்புள்ள 19 பழமையான சிலைகளை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு கடத்தி விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவானது.

அந்த வழக்கில் கும்பகோணம் சிறப்புநீதிமன்றம் சுபாஷ் கபூருக்கு கடந்த 1-ம் தேதி, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. ஏற்கெனவே சுபாஷ் கபூர் 10 ஆண்டுசிறை தண்டனையை முடித்து விட்டார். இருப்பினும், அவர் மீது மேலும் 4 சிலை கடத்தல் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, அதிலும் தண்டனைபெற்றுக் கொடுக்க போலீஸார் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூரை உடையார்பாளையம் வழக்கு முடிந்த உடன் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம் என தமிழக போலீஸார் உறுதியளித்திருந்தனர். ஆனால், அவர் ஜெர்மன் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. தொடர்ந்து கால தாமதம் ஆவதால் குற்றவாளிகளை பரிமாறி கொள்வதற்காக பரஸ்பர ஒப்பந்தத்தை முடித்து கொள்வதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சுபாஷ் கபூர் விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை, தமிழக தலைமைச் செயலருக்கு அண்மையில் கடிதம் எழுதியது. இதையடுத்து சுபாஷ் கபூரை மத்திய அரசு மூலம் ஜெர்மன் அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுபாஷ் கபூரின் எண்ணம்

சுபாஷ் கபூர் 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார். இருப்பினும் அவர் மீது மேலும் சில வழக்குகள் உள்ளதாலும், நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்தாததாலும் அவர் சிறையிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்ட பின்னர் 2012-ல் நியூயார்க்கில் இருக்கும் சுபாஷின் வேர்ஹவுஸ்களை அமெரிக்க காவல்துறை சோதனை செய்து 100 மில்லியன் டாலர் மதிப்பிலான கலைப்பொருட்களை கைப்பற்றி இருந்தது. அவர்மீது சுமார் 32 வழக்குகள் வரை அங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சுபாஷ் கபூர் ஜெர்மனியிடம் ஒப்படைக்கப்பட்டாலும், பின்னர், அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், சுபாஷ் கபூர் இந்தியாவை விட்டுச் செல்ல மனமின்றி இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.