அரவக்குறிச்சி அருகே தடாகோவில் பகுதியில் நாளை (நவ.11) நடைபெறும் விழாவில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 2-ம் கட்டமாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி ஊராட்சி தடாகோவில் பகுதியில் நாளை (நவ.11) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதற்கான மேடை, விழா அரங்க மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்த மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது, 2-வது கட்டமாக நவ.11-ம் தேதி (நாளை) அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெறும் விழாவில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக 20,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில், கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20,000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். இந்த இலவச மின் இணைப்புக்காக, பல இடங்களில் மின்கம்பங்கள் அமைக்க வேண்டிய சூழல் இருப்பதால், தொடர்ந்து பிற பகுதிகளிலும் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றார். அப்போது, ஆட்சியர் த.பிரபு சங்கர், எஸ்.பி. சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத், கோட்டாட்சியர் பா.ரூபினா, எம்எல்ஏக்கள் குளித்தலை ரா.மாணிக்கம், அரவக் குறிச்சி ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி, மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன், மண்டலக் குழுத் தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், ராஜா, அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.