மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், வருகிற 15-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இதற்கிடையில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடவும் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
அதற்கு கடிவாளம் போடும்வகையில் தமிழக அரசு நேற்று கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடவும் அதிகமாக வாங்கினால், கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், தனியார் சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் டீன்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- * சுயநிதி கல்லூரிகள், 2022-23 கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சுற்றுகளுக்கான கவுன்சிலிங்குக்கு மறுப்பு தெரிவித்தாலோ, கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிடவும் கூடுதலாக வசூலித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை சுயநிதி கல்லூரிகள் கண்டிப்புடன் பின்பற்றவேண்டும். * இந்தச் சூழலில், மாணவர்களிடம் இருந்து ஏதாவது குறிப்பிட்ட புகார்கள் பெறப்பட்டு உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து அல்லது திரும்பப்பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். * தேர்வுக்குழு விதித்த விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று சுயநிதி கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. * மாணவர் சேர்க்கையில் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மீறும்பட்சத்தில், அது கடுமையானதாக கவனத்தில்கொண்டு, சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.