பாராளுமன்றம் வரும் பாடசாலை மாணவர்களுக்கு பால்

111 0

பாராளுமன்றத்தை பார்வையிட வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கிளாஸ் பால் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டடுள்ள மூன்று நிலையியல் குழுக்கள் குறித்து மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் புதன்கிழமை (09) பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டம் கூடியது.

வங்கித்  தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு,வழிவகைகள் பற்றிய குழு,பொருளாதார உறுதிப்படுத்தல் குழு உள்ளிட்ட மூன்று குழுக்களை ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம்,ஹர்ஷ டி சில்வா,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த விசேட குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போது நடைமுறையில் உள்ள நிலையியற் குழுக்களான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு),அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு),அரசாங்க நிதி பற்றிய குழு ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் இந்தப் புதிய நிலையியற் குழுக்களின் விடயங்களுடன் தொடர்புடையதாக செயறபடுகிறதா என்பது குறித்து ஆராய்ந்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது பற்றிய பரிந்துரைகளை இந்த குழுக்கள் முன்வைக்கும்.

2023ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுத் (திருத்தச்)சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதத்திற்கான நேரத்தை அதிகரிப்பது குறித்து எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குழுநிலை விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை ஒன்றரை மணித்தியாலங்களினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் நடைபெறும் 23ஆட் திகதி முதல் டிசெம்பர் மாதம் 07ஆம் திகதி வரையான காலப் பகுதியில் பாராளுமன்ற விவாதம் பிற்பகல் 07 மணிவரை நடத்தப்படவிருப்பதுடன்,இதற்கு மன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கமைய டிசெம்பர் மாதம் 08 ஆம் திகதி மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பிற்பகல் 05.மணிக்கு நடத்தப்படவுள்ளது.

பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கிளாஸ் பால் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஆண்டு முதல் நாளொன்றுக்கு 500 பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.