எரிபொருள் விலை அதிகரிப்பினால் இலாபமடையவில்லை. நட்டமடைந்துள்ளோம். உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்தால் அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம். ஒரு லீற்றர் டீசல் விற்பனையால் 12 ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் புதன்கிழமை (09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக 92 டொலராக காணப்பட்ட பெற்றோல் ஒரு தாங்கியின் விலை தற்போது 99 டொலராக உயர்வடைந்துள்ளது.இவ்வாறான நிலையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை குறைக்க முடியாது.
ஒரு லீற்றர் டீசல் விற்பனையால் 12 ரூபா நட்டத்தையும்,ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விற்பனையால் 22 ரூபா நட்டத்தையும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்க்கொள்கிறது.எரிபொருள் விலை அதிகரிப்பால் இலாபமடையவில்லை,நட்டமடைந்துள்ளோம்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் போது அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம்.எரிபொருள் விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருளின் விலை தீர்மானிக்கப்படுகிறது,இதில் எவ்வித முறைகேடும் கிடையாது என்றார்.