முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்ட எம்.சி.சி.ஒப்பந்தத்தை கைச்சாத்திட தற்போதைய அரசாங்கம் எவ்வித பேச்சுவார்த்தையையும் எடுக்கவில்லை. எம்.சி.சி.ஒப்பந்தத்திற்கும்,சீனாவுடனான கடன் மறுசீரமைப்பிற்கும் இடையில் தொடர்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் புதன்கிழமை (09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
அமெரிக்கா , அமெரிக்காவுடனான மிலேனியம் செலன்ஜ் கோபரேஷன் (எம்.சி.சி) ஒப்பந்தத்தில் காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து துறை அபிவிருத்தி ஆகிய இரு முக்கிய துறைகளை அடிப்படையாக கொண்டதாக காணப்பட்டது. கொழும்பு நகரின் மத்திய சுற்றுவட்டம், அவிசாவளை தொடக்கம் இரத்தினபுரி, தம்புள்ள முதல் நாவுல,இரத்தினபுரி தொடக்கம் பெல்மடுல்ல ஆகிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் யோசனைகள் பரிந்துரைக்கப்பட்டன.
திருகோணமலை துறைமுகம் முதல் கொழும்பு துறைமுகம் வரையிலான பகுதியில் உள்ள விசேட பொருளாதார மையங்களை அபிவிருத்தி செய்யும் யோசனைகள் உள்ளடக்கப்பட்டன.
மறுபுறம் காணி திணைக்களத்தை நவீனப்படுத்த விசேட திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.காணி திணைக்களத்தின் கடமைகளின் போது கடதாசி பயன்பாட்டுக்கு பதிலாக டஜிட்டல் முறைமையில் பணிகளை முன்னெடுத்தல், நவீன முறைமைக்கமைய ஆவணப்படுத்தல் பத்திரங்களை டிஜிட்டல் மயப்படுத்தல் உள்ளிட்ட பல அனுகூலங்கள் எம்.சி.சி. ஒப்பந்தத்தில் காணப்பட்டன.
எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நீதியமைச்சு,நிதியமைச்சு,பெருந்தெருக்கள் அமைச்சு,பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு,காணி விவகாரங்கள் அமைச்சின் பிரநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.அத்துடன் சட்டமாதிபர் திணைக்களத்தில் அதிகாரிகளும் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் பல சர்ச்சைகள் காணப்பட்ட போது கடந்த 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் எம்.சி.சி.மீளாய்வு குழு நியமிக்கப்பட்டது.பல கட்ட ஆய்வுகளை தொடர்ந்து குழுவினர் 2020ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அறிக்கை சமர்பித்தின்னர்.எம்.சி.சி ஒப்பந்தம் கைச்சாத்திட கூடாது என மீளாய்வு குழுவின் பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதை தொடர்ந்து அப்போதைய அரசாங்கம் எம்.சி.சி.ஒப்பந்தத்தை இரத்து செய்தது.
ஒரு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை பிறிதொரு அரசாங்கம் மாற்றியமைக்கலாம்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இரத்து செய்த எம்.சி.சி ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் எடுக்கவில்லை.
எம்.சி.சி ஒப்பந்தத்திற்கும்,சீனாவுடனான கடன் மறுசீரமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது இலகுவானதொரு விடயமல்ல,ஆகவே குறுகிய அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுக்கு தடையேற்படுத்த கூடாது என்றார்.