சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் உணர்வுபூர்வமான விடயங்களை பகிரங்கப்படுத்த போவதில்லை

98 0

பாராளுமன்ற நிதி விவகாரம் தொடர்பான குழுவிற்கு கூட சமர்ப்பிக்காத சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்ட அறிக்கை மூன்றாம் தரப்பினர் கைகளுக்கு எவ்வாறு சென்றது.அறிக்கை தற்போது என்னிடம் உள்ளது.

முக்கிய பொறுப்பில் உள்ளதால் அறிக்கையின் உணர்வுபூர்வமான விடயங்களை பகிரங்கப்படுத்த போவதில்லை என பாராளுமன்ற நிதி விவகாரம் தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) பெறுமதி சேர் வரிச்சட்டத்தின் கீழான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டு நிபந்தனைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம்,உணர்வு பூர்வமான விடயங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அதனை பகிரங்கப்படுத்த முடியாது என அரசாங்கம் குறிப்பிட்டது.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மாத்திரம் உண்டு.பாராளுமன்றத்தின் நிதி தொடர்பான குழுவிற்கு கூட சமர்ப்பிக்காத ஊழியர் மட்ட அறிக்கை எவ்வாறு வெளி நபர் கைகளுக்கு சென்றது.இந்த அறிக்கை தற்போது என்னிடம் உள்ளது.

பொறுப்பான பதவி உள்ள காரணத்தினால் இந்த உணர்வுப்பூர்வமான விடயங்களை பகிரங்கப்படுத்த மாட்டேன்.சீன வரி குறைப்பினால் சுமார் 1670 கோடி ரூபா வருவாயை அரசாங்கம் இழந்துள்ளது.50 ரூபாவாக காணப்பட்ட விசேட வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டது.சீனி வரி குறைப்பின் பயனை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை,ஒரு சில முன்னணி இறக்குமதியாளர்கள் மாத்திரம் வரி குறைப்பின் பயனை பெற்றுக் கொண்டார்கள்.

சீனிவரி குறைப்பு தொடர்பான தீர்மானத்தை கடந்த அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை.ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானங்கள் முழு பொருளாதாரத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கியது.இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனை தடை செய்ததை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு அறிவித்தாரா,

2022ஆம் ஆண்டுக்கான அரச வருமானம் 2 ரில்லியன் என மதிப்பிடப்பட்ட போதும் அந்த இலக்கை அடைய முடியவில்லை.2023ஆம் ஆண்டுக்கான அரச செலவினம் 7885 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.அரச வருமானத்திற்கும்,அரச செலவினத்திற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.வரவு செலவு  பற்றாக்குறையை பூர்த்தி செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

கடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் பூண்டு இறக்குமதி  மோசடி,தேங்காய் எண்ணெய் இறக்குமதி மோசடி உள்ளிட்ட பல மோசடிகள் இடம்பெற்றன.இந்த மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இழக்கப்பட்டுள்ள அரச வருமானத்தை  மீட்பது தொடர்பில் அவதானம் செலுத்தாமல்,வரி அதிகரிப்பை மாத்திரம் அரசாங்கம் பிரதான தீர்வாக கொண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் நடுத்தர மக்கள் சொல்லனா துயரங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.44 இலட்சம் பேர் மனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கமைய நாட்டில் 99 இலட்சம் பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் போது நாட்டில் 30 இலட்சம் பேர் ஏழ்மை நிலையில் இருந்தார்கள்.நாங்கள் தான் நன்றாக செய்தோம் என குறிப்பிட்டுக் கொண்டு கோட்;டபய ராஜபக்ஷ 30இலட்ச ஏழ்மையாளர்களை 96 இலட்சமாக உயர்த்தியுள்ளமை கவலைக்குரியது என்றார்.