பாராளுமன்ற நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சபாநாயகருக்கு ஜனாதிபதி எழுதியிருந்த கடிதம் அச்சுறுத்தலான கோரிக்கை அல்ல. மாறாக வேண்டுகோளாகும் என ஆளுங்கட்சி பிரதமகொறட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதமகொறட லக்ஷ்மன் கிரியெல்ல ஒகுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு சபாநாயகரே பொறுப்பாகும். அதனால்தான் ஜனாதிபதி கடிதம் ஒன்றின் ஊடாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மந்தகதியில் செல்கின்றன. பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
அத்துடன் பாராளுமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஆளும் தரப்பினர் விரைவாக செயற்படுவதில்லை என சபாநாயகர் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருக்கின்றார்.
அவரின் கருத்து சரியானது. ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றோம். அதனை அரசாங்கம் இன்னும் செய்யவில்லை.
அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கை சபைக்கு சமர்ப்பித்தால், இந்த உடன்படிக்கை இல்லாமல், எப்படி விவாதிப்பது? என்றார்.
இதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவிக்கையில், சபாநாயகருக்கு ஜனாதிபதி எழுதியிருந்த கடிதம் எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே எமக்கு விளங்குகின்றது. ஏனெனில் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த யாரும் எனக்கு தெரிந்தமட்டில் இவ்வாறானதொரு கடிதம் சபாநாயகருக்கு எழுதியதில்லை என்றே நான் நினைக்கின்றேன் என்றார்.
இந்த விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு அனுப்பி இருந்த கடிதம், அச்சுறுத்தலானது அல்ல. மாறாக பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியர் என்றவகையில், கட்சித்தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோளாகவே அனுப்பப்பட்டிருந்தது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சில தீர்மானங்களை எடுத்திருந்தோம். குறிப்பாக துறைசார் மேற்பார்வை குழுவை அமைத்தல், இளைஞர்கள் 5பேரை அதில் உள்ளடக்குதல், தேசிய சபை அமைத்தல் இவ்வாறான விடயங்களை விரைவாக மேற்கொள்ளுமாறே கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த கடிதத்தையும் சபைக்கு சமர்ப்பிக்கின்றேன் என்றார்.