“துப்பாக்கி விற்பனைக்கு உண்டு” விளம்பரமே சிக்கலானது

130 0

கைத்துப்பாக்கி ஒன்று 32,000 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளதாக கூறி, கைத்துப்பாக்கியை விலைக்கு வாங்குவதற்கு வருபவர்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட்டு வந்த கும்பலைச் சேர்ந்த நால்வர் வென்னப்புவ பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையாகியுள்ள குறித்த நால்வரும், தமது அன்றாட போதைப் பொருள் பாவனைக்கு பணத்தை தேடிக் கொள்வதற்கு இவ்வாறு     பணத்தைக் கொள்ளையிட்டு வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி ஒன்று விற்பனைக்கு ஆயத்தமாக உள்ளது என பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயவீதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவ்வாறு இந்நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து உண்மையிலேயே கைத்துப்பாக்கி விற்பனை செய்வதற்கான எந்த ஆயத்தங்களும் அங்கு இருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைத்துப்பாக்கி ஒன்று விற்பனை செய்யப்பட இருப்பதாகக் கூறி அதனை வாங்க வருபவர்களை பாழடைந்த இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடும் சம்பவமே உண்மையில் இடம்பெற்று வந்திருப்பதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைத் துப்பாக்கியை வாங்கச் செல்பவர் போன்று வேடமிட்ட விசேட அதிரடிப்படையினரால் நியமிக்கப்பட்ட ஒருவரின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவ்வாறு நாத்தாண்டி மற்றும் வென்னப்புவ பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து 50 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவர்கள் சில காலமாக இவ்வாறு ஆட்களை ஏமாற்றி பணத்தைக் கொள்ளையிடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்திருப்பது விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நால்வரையும் மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.