அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை

108 0

நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள அவ்வர்த்தகப்பிரமுகர்கள் குழுவினர், தமிழ்மக்களுக்கு மிக அவசியமான 5 – 6 தீர்வுகளைப் பட்டியலிட்டு தம்மிடம் வழங்கினால் அதனை கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடியத்தூதுவருடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்க தம்மால் முடியும் என்றும், அதனூடாக பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யும் அதேவேளை அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தையும் வழங்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் தலைமையில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் 17 பேரடங்கிய குழுவொன்று கடந்த வாரம் நாட்டை வந்தடைந்துள்ளது.

அக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். அதேவேளை கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவின் சார்பில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ், கனடா – இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை, கனடா – இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் பணிப்பாளர் கணேசன் சுகுமார் மற்றும் கனடா – இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் இலங்கைக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் இளங்கோ ரட்ணசபாபதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கனேடிய வர்த்தகர்கள் குழு இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே பெருமளவிற்கு முதலீடு செய்வது பற்றி அவர்கள் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருப்பதாகவும், அதற்கு சாதகமாக ஜனாதிபதி பதிலளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தமக்கிடையிலான சந்திப்பின்போது இலங்கையில் இனப்பிரச்சினைக்கு உரியவாறு தீர்வுகாணப்படாமையே தற்போது நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளமைக்குக் காரணமென இரா.சம்பந்தன் கனேடிய வர்த்தகப்பிரமுகர்களிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன், ‘நாங்கள் புதிய முதலீடுகளை வரவேற்கின்றோம். இருப்பினும் அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனடா – இலங்கை வர்த்தகக் கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

‘நாம் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் எமது பிரதேசங்களில் முதலீடு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கைக்கு வருகைதந்திருக்கின்றோம். அதற்கு தமிழ் அரசியல் தலைவர்களின் ஆலோசனைகளும், உதவிகளும் அவசியமாகின்றன. நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் அதேவேளை, அரசியல் தீர்வை நோக்கிய நகர்வையும் சமாந்தரமாகக் கொண்டுசெல்லவேண்டும் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. அந்தவகையில் தமிழ்மக்களுக்கு மிக அவசியமான 5 – 6 தீர்வுகளைப் பட்டியலிட்டு எம்மிடம் வழங்கினால் அதனை கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடியத்தூதுவருடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் எம்மால் கையளிக்கமுடியும். அதனூடாக அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தையும் வழங்கியவாறு பொருளாதார ரீதியில் எமது மக்கள் முன்னேற்றமடைவதற்கு அவசியமான பங்களிப்பைச் செய்யமுடியும்’ என்று தெரிவித்துள்ளார்.