அரசாங்கத்தின் சதித்திட்டத்துக்கு மஹிந்த தேசப்பிரியவும் உடந்தையாகிவிடக் கூடாது

93 0

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே, தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சதித்திட்டத்தின் பங்காளியானால், அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும். இந்த சதித்திட்டத்துக்கு மஹிந்த தேசப்பிரிய உடந்தையாகிவிடக் கூடாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எல்லை நிர்ணய குழுவின் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுவதற்கு அவர் கடும் எதிர்ப்பினை வெளியிட்ட ஒருவராவார். எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சதித்திட்டத்தின் சதிகாரராகிவிடாமல், அவர் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையையும் நம்பிக்கையையும் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மாறாக, இதில் அவரது பங்களிப்பும் காணப்படுமாயின், இதுவரை காலமும் பேணி பாதுகாத்த அவரது நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படும்.

நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்த தேர்தலுக்கும் தயாராகவே உள்ளோம். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களில் சுதந்திர கட்சி ஈடுபட்டு வருகிறது. அதன் காரணமாகவே தொகுதிகளை பலப்படுத்தும் நோக்கில் மாநாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.