தேர்தலை நடத்த வேண்டிய தேவை தற்போது இல்லை என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளமை முட்டாள்தனமானதாகும். மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காது.
ஆகவே தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேசிய வருமானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் இவ்வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது , இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியில் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும்.
விருப்பத்துடன் வரி அதிகரிக்கவில்லை , மாற்று திட்டம் இல்லாத காரணத்தினால் வரி அதிகரிப்பை அதிகரிக்க நேரிட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுகிறது , நடைமுறைக்கு சாத்தியமான பல திட்டங்கள் உள்ளன , ஆனால் அரசாங்கம் வரி அதிகரிப்பை மாத்திரம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது.
அரச நிர்வாகத்தில் ஊழல் மோசடி மிதமிஞ்சியுள்ளதால் சர்வதேச நிறுவனங்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை புறக்கணித்துள்ளன.
மோசடி செய்யப்பட்டுள்ள அரச நிதியை மீண்டும் அரசுடமையாக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
வரி அதிகரிப்பு நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடுத்தர மக்களை பலியாக்குவது வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தெரிவு குழு தேர்தல் முறைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் தேர்தல் முறைமை தொடர்பில் புதிய தெரிவு குழு ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
எல்லை நிர்ணய குழு நியமனம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தடையாக அமையாது என அரசாங்கம் குறிப்பிடுகிறது.எல்லை நிர்ணய அறிக்கை எத்தன்மையில் அமையும் என்பதை எதிர்பார்த்துள்ளோம்.
அறிக்கையின் பரிந்துரைகள் முரண்பட்டதாக காணப்பட்டால் அது உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தேர்தலை நடத்த வேண்டிய தேவை தற்போது கிடையாது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளமை மூர்க்கத்தனமானதாகும்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்களாணை கிடையாது.ஆகவே ஐக்கிய தேசிய கட்சி தேர்தலுக்கு செல்ல விரும்புவதில்லை.
மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது.இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது.
ஆகவே தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துக் கொள்ள நாட்டு மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டால் அதற்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.