அநீதிச் சந்தையை ஒழிப்பது கடமை

112 0
நாட்டின் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை உற்று நோக்கும் போது, நாட்டு மக்களை அசௌகரியத்தில் ஆழ்த்தும் அநீதியான சந்தை உருவாகி இருப்பது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய, இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டி ருந்ததுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

நாட்டின் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை உற்று நோக்கும் போது, நாட்டு மக்களை அசௌகரியத்தில் ஆழ்த்தும்  அநீதியான சந்தை உருவாகி இருப்பது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது

குறிப்பாக அண்மை காலங்களில் சீனி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறைவடைந்திருந்த போதிலும், அதற்கு நிகரான சந்தை விலை காணப்படாமையினால் சாதாரண நுகர்வோருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அரசாங்கத்தின் கடமை என்று நாம் கருதுவதினால் இதற்கான உகந்த நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

திறந்த பொருளாதார சந்தை முறையில் விலைக் கட்டுப்பாடு போன்ற நடைமுறை சாத்தியமில்லாத அணுகுமுறைகளுக்கு பதிலாக அத்தியாவசிய பொருட்களின் விலையை ஒழுங்குப்படுத்தும் முறையை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

1980 இல் திறந்த பொருளாதாரத்தையும்  உள்நாட்டு சீனி உற்பத்தியாளர்களையும் பாதுகாத்துக் கொண்டு சீனியின் சந்தை விலையை நியாயமான முறையில் பேணுவதற்கு சீனி உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், திரைசேரிக்கும் இடையில் நடைமுறைப்படுத்திய நடைமுறையை தற்போது பயன்படுத்தலாம் என்பது எமது நம்பிக்கையாகும்.

இதன்போது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் சீமந்து போன்ற பொருட்களுக்கும் நியாயமான சில்லறை விலையை நுகர்வோர் சேவைகள் அதிகார சபை நியமிக்கலாம்.

சுட்டிக்காட்டும் விலை எனும் நடைமுறை 2000 களின் முதல் பாகத்தில் வெற்றிகரமாக இயங்கியதை குறிப்பிட வேண்டும்.

தற்போது நாடு முகம் கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வணிக மற்றும் நிதித்துறை பாரிய சவால்களுக்கு உள்ளாகி இருந்தாலும், சில பொருட்கள் மற்றும் சேவைகளில் விலை அதிகரிப்பை தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது.

குறுகிய நோக்கங்களுக்காக செயற்படும் சில அதிகாரிகளும் அரச உத்தியோகத்தர்களின் அனுசரனை பெற்ற வர்த்தகர்களும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அண்மை காலங்களில் இலங்கையில் இடம் பெற்ற பாரிய ஊழலாக கருதப்படும் சீனி வரி மோசடி ஊடாக சம்பாதித்த பெருமளவு பணத்தை இதற்கு உதாரணமாக சுட்டிக் காட்டலாம். இது போன்ற சூழல்களை இல்லாதொழிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

ஆகையால் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அதிகரித்திருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை ஒழுங்குபடுத்துமாறும், துரிதமான நடைமுறை சாத்தியமான செயல்முறைகளை கையாளுமாறும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.