மத்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று பார்க்காமல், காணிகளைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் (02) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்படி கூறினார்.
இதன் போது மேலும் தெரிவித்ததாவது: வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது சுமுகமான நிலைநிலவுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கை அரசாங்கத்தால் யாழ். குடா நாட்டில் வலிவடக்கு பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளைக் கையகப்படுத்துவதற்கான செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், படைகளின் பாவனைக்காக தொடர்ந்தும் ஏன் காணிகளைப் பெறுகின்றார்கள் என எனக்குத் தெரியவில்லை. வடக்கு, கிழக்கில் சுமூகமான நிலை இருக்கின்றபோது வடக்கு, கிழக்கில் முப்படைகளுக்கும் எதற்காகக் காணி கையகப்படுத்தப்பட வேண்டும்? மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கப்பட போகின்றதா? அல்லது, இராணுவம் வேறு ஏதும் திட்டமிட்ட செயற்பாடுகளை தொடங்கி இருக்கின்றதா?
வடக்கு, கிழக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற காணி தொடர்பான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். காரணம், மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று பார்க்காமல், உடனடியாக இந்தக் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை வடகிழக்கில் நிறுத்த வேண்டும் என இதன்போது வேண்டுகோள்விடுத்தார்.