மேல் மாகாணத்தில் 100 வீடுகளில் 20 வீடுகளுக்கு டெங்கு அச்சுறுத்தல்

97 0

மேல் மாகாணத்தில் 100 வீடுகளில் 20 வீடுகள் டெங்கு நுளம்பு அதிகளவில் பரவக் கூடிய சூழலைக் கொண்டுள்ளன.

மருந்து தட்டுப்பாடு மருத்துவக் கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலைமையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரையும் வைத்தியசாலைகளுக்குள் உள்வாங்கும் திறன் குறைவாகவே காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு டெங்கு நோயின் தாக்கம் பாரியளவில் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் டெங்கு நோயின் சடுதியான அதிகரிப்பினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மேல் மாகாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் 100 வீடுகளில் 20 வீடுகள் டெங்கு நோய் பெருகக்கூடிய சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவக் கட்டமைப்பில் காணப்படுகின்ற மருந்து தட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்டளவு நோயாளர்களைத் தவிர , அளவிற்கதிக நோயாளர்களை பராமறிக்கும் திறன் வைத்தியசாலைகளில் குறைவடைந்து வருகிறது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் பட்சத்தில் அவர்களை வைத்தியசாலைகளுக்குள் உள்வாங்க முடியாத நிலைமை ஏற்படும்.

தற்போதைய காலநிலைக்கமைய டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரிக்கலாம் என்பதால் , காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு அறிவுறுத்துகின்றோம் என்றார்.

இந்நிலையில் 21 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு நோய் பரவக் கூடி ய அதிக அபாயம் மிக்க வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வலயத்தில் காணப்படும் 9 பகுதிகளில் தொடர்ந்தும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவதாகவும் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பிலியந்தல, ஹரிஸ்பத்துவ, உகுவெல, பதுளை, கேகாலை மற்றும் மாவனெல்ல ஆகிய சுகாதார மருத்;துவ அதிகாரி பிரிவுகளிலேயே இவ்வாறு அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இவ்வாண்டின் 43 ஆவது வாரத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பில் ஒரு வாரத்தில் மாத்திரம் 143 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் இந்தக் காலப்பகுதிக்குள் கொழும்பில் 7296 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில் , இவ்வாண்டு அதே காலப்பகுதியில் அந்த எண்ணிக்கை 14 937 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாண்டில் இதுவரையில் 62 435 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு 40 248 நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.