அடுத்த தேர்தலில் எவரும் தனித்து ஆட்சியமைக்க முடியாது

116 0

அடுத்துவரும் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. அதனால் பலம் மிக்க கூட்டணி அமைத்து, ஐக்கிய தேசிய கட்சியை அதன் பிரதான கட்சியாக ஏற்படுத்துவதே எமது இலக்காகும். அதற்காக கட்சியை பலப்படுத்துவதற்கு கட்சி ஆதரவாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

அத்துடன் நாட்டை  முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுவரும் வேலைத்திட்டம் வெற்றியளித்து வருகின்றது.

அதனால் எதிர்காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்து இன்னும் பலர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முன்வர இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி ஊடக பிரிவு  அங்குரார்ப்பணம் நிகழ்வு கட்சியின் தலைமையமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இடம்பெற இருக்கும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. பொதுக்கூட்டணி ஒன்றின் மூலமே நாட்டை ஆட்சியை செய்ய முடியுமாகின்றது.

அதனால் அவ்வாறு அமைக்கப்படும் பொது கூட்டணியின் பிரதான கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியை ஏற்படுத்திக்கொள்ளவதே எமது இலக்கு. அதனை எம்மால் செய்ய முடியும்.

ஏனெனில் பாராளுமன்றத்தில் தனி ஒரு ஆசனத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு நாட்டின் தலைவராக தெரிவுசெய்யப்பட எமது தலைவர் திறமையாகி இருக்கின்றார்.

அதனால் அந்த இலக்கை அடைந்துகொள்ளும் பொருட்டு அதற்கான முயற்சிகனை மேற்கொள்ள தற்போது நேரம் வந்துள்ளது. தொகுதி அடைப்படையில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் எமக்கு ஆலாேசனை வழங்கி இருக்கின்றார்.

அத்துடன் நாடு வீழ்ச்சியடைந்திருந்தபோது அதனை பொறுப்பேற்று நாட்டை கட்டியெழுப்ப யாரும் முன்வராத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை பொறுப்பேற்றார். தற்போது சவால்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டு முன்னேறிச்செல்கிறார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தற்போது ஆளணி  குறைவாக இருந்தாலும்  சிறப்பான ஆளுமை இருக்கின்றது. எமது கொள்கை உறுதியாளது.

அதனை தற்போது மக்கள் உணர்ந்து வருகின்றனர். யாரும் விரும்பியோ இல்லாவிட்டாலாே ரணில் விக்ரமசிங்க சர்வதேச ரீதியில் தலைசிறந்த தலைவராக அங்கிகரிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணிக்கே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். அதனால் நாங்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுபட்டு கட்சியை பலப்படுத்த அர்ப்பணிக்க வேண்டும்.

1994இக்கு பிறகு எமக்கு கிடைக்காமல் இருந்த ஜனாதிபதி பதவி தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

அதனால் உரிய காலத்துக்கு தேவையான தேர்தல்கள் இடம்பெறும். அது நாங்கள் வெற்றிகொள்ளும் நேரமாகும். அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படப்போவதும் ரணில் விக்ரமசிங்கவாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அத்துடன் அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மற்றும் அடம்பெற்ற சம்பவங்களை பார்ககும்போது, நாடு மேலும் வீழ்ச்சியடைவதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் நாட்டை அபிவிருத்திசெய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை ஆதரித்து வருவதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

அதனால் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட இன்னும் பலர் முன்வர இருக்கின்றனர். அதேபோன்று அடுத்தவருடமாகும்போது மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

இவை அனைத்தையும் மேற்கொள்ள சிறந்த தலைமைத்துவமே காரணமாகும். கடந்த அரசாங்கத்தில் அவ்வாறான தலைமைத்துவம் இல்லாமல் போனதே நாடு இந்த நிலைக்கு வீழ்ச்சியடைய காரணமாகும் என்றார்.