தமிழ் மக்களின் எதிர்காலத்தை குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற வேலை திட்டத்தில் ஹரிஸ் எம்.பி

123 0
கல்முனை வடக்கு பிரதேசம்  நிர்வாக ரீதியாக இயங்குகின்றது.  அதன் நிர்வாக நடைமுறைகளை முடக்குகின்றார்கள். அதற்கு  அரசாங்கத்தில் இருக்கின்ற சில அதிகாரிகள் துணையாக இருக்கின்றனர்.   தமிழ் சமூகத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் சிங்கள மக்களையும் இணைக்கின்ற அரசியல்வாதிகளை  உருவாக்கவேண்டும்.  இதன் மூலம் தான் இந்த மாவட்டம் மாத்திரமல்ல, மாகாணம் மாத்திரமல்ல,  இந்த நாடும் முன்னேறும் என்று தவராசா கலையரசன் எம்.பி தெரிவித்தார்.

சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சிறியபுஷ்பம், 2022ஆம் ஆண்டுக்கான ‘குரு பிரதீபா பிரபா’ சிறந்த அதிபர் விருது பெற்றதை கௌரவிக்கும் முகமாக இடம்பெற்ற விழாவில் நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சொறிக்கல்முனை சமூகநல மேம்பாட்டு அமைப்பினரும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் இணைந்து இந்த பாராட்டு விழாவை  நேற்றுமுன்தினம் (01) நடத்தியது.

கலையரசன் எம்.பி தொடர்ந்து அங்கு கூறியதாவது: கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தை முடக்க வேண்டும் என்பதற்காக பல குழுக்களை அமைத்து, தமிழ் மக்களின் எதிர்காலத்தை குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற வேலை திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் செயல்படுகிறார்.

நாட்டிலேயே தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு தாயகம் என்பது, தமிழ், முஸ்லிம் மக்களின் தாயகமாகும்.

அன்று இருந்து இன்று வரை விட்டுக் கொடுத்து வந்தவர்கள் நாங்கள் தான். எந்தக் கட்டத்திலும் முஸ்லிம் மக்களையும் இணைத்துத் தான் எமது பேச்சும் இருக்கும்; செயலும் இருக்கும்.

இன ஒற்றுமையை விரும்பாமல் மதம், பிரதேசம் சார்ந்த அடிப்படையில் செயற்படுவது ஒரு வியாதி.  ஹரீஷ் போன்றவர்களை முஸ்லிம் சகோதரர்கள் ஒதுக்க வேண்டும்.

ஒரு பிரதேச செயலாளர் இருக்கும் போது, அவருக்கு தெரியாமல் அவரது பிரிவில் உள்ள கிராம சேவையாளர் பிரிவின் எல்லையை நிர்ணயிப்பதும்  குளங்களை மண் போட்டுநிரப்புவதும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்வதும் ஹரீஸின் வேலையாக உள்ளது. ஹரீஷ் போன்றவர்கள் இருந்தால், இப்பகுதியில் இன நல்லுறவு, புரிந்துணர்வு என்பவை எதிர்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கும் என்றார்.