நியோனா என்ற இலவச இதய சத்திரசிகிச்சை திட்டத்தின் கீழ், பிறவி இதயக் குறைபாடுகளுடன் பிறந்த கொழும்பைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளுக்கு கொச்சினில் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரோட்டரி அறக்கட்டளையின் உதவியுடன் ரோட்டரி கிளப் ஆஃப் கொச்சின் வெஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கொழும்பு வெஸ்ட் இணைந்து செயல்படுத்திய திட்டத்தின் கீழ், மேற்குறிப்பிட்ட 5 குழந்தைகளுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நியோனா என்பது இலங்கையின் கொழும்பில் பிறவி இதய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான இலவச இதய அறுவை சிகிச்சை திட்டமாகும். கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
2 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 65 குழந்தைகள் பயனடைவார்கள். இத்துடன் அமிர்தா மருத்துவமனையில் இலங்கை மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ரோட்டரி மாவட்ட 3201 ஆளுனர் எஸ் ராஜ்மோகன் நாயர் சமீபத்தில் பனம்பில்லி நகரில் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு லட்சத்தீவு அருகே படகு விபத்தில் உயிரிழந்த ஒன்றரை வயது சிறுமி நியோனாவின் நினைவாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் கொச்சினில் ரோட்டரி கிளப் உடன் ஒத்துழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.