கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சர் நலின் தில்ருக் ஆகிய இருவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இன்று செவ்வாய்க்கிழமை (1) அதே நீதிமன்றால் மீளப் பெறப்பட்டது.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக் கோவையின் 136 ( 1) ஆம் அத்தியாயத்தின் கீழ் , இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றே, அம்மனுவின் பிரதிவாதிகளாக குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் பெயரிட்டே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அம்மனு சட்ட மா அதிபரால் நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்ரம ஆஜராகி முன் வைத்த விடயங்களை ஆராய்ந்து, கோட்டை நீதிவான் திலின கமகே, முன்னர் பிறப்பித்த அழைப்பாணையை மீளப் பெறுவதாக அறிவித்தார்.
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி , காலி முகத்திடல் முதல் புதுக் கடை நீதிமன்ற வளாகம் வரையில் பேரணியாக செல்ல முயன்ற ஆர்ப்பாட்ட பேரணிக்கு தேவையற்ற இடையூறுகளை விளைவித்து அதனை தடுத்ததாக கூறி இந்த தனிப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் ஊடாக குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளும் தண்டனை சட்டக் கோவையின் 330 மற்றும் வீதிகள், சாலைகள் தொடர்பிலான சட்டத்தின் 59 (1) ஆம் பிரிவின் கீழும் தண்டனைக்குரிய குற்றத்தினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்களின் கீழும், அந்த இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் திருப்தியடைவதால், இவ்வாறு மனுவை விசாரணைக்கு ஏற்று, அவர்களை மன்றில் ஆஜராக உத்தரவிடுவதாக நீதிவான் திலின கமகே கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி அறிவித்தார்.
நேற்று இம்மனு விசாரணைக்கு வந்த போது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்ரம,
குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 97 (1) பிரிவின்படி சட்டமா அதிபரின் அனுமதியின்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என வாதிட்டார்.
அத்துடன் உண்மைகளை தவறாக சித்தரித்து அழைப்பாணை உத்தரவு பெறப்பட்டதால், இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட அழைப்பாணையை மீளப்பெறுமாறும் அவர் நீதிமன்றத்தை கோரினார்.
இந் நிலையிலேயே குறித்த வாதங்கலை ஏற்ற கோட்டை நீதிவான் திலின கமகே, அழைப்பாணையை மீளப் பெற்று மனு மீதான விசாரணையை 8 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தார்.