பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மைக்கு எதிராக எதிர்வரும் வாரம் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,அவர் தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கும் கிடையாது.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது பொருளாதார மீட்சிக்கான இறுதி தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுக்கொள்கிறார்.கடன் மறுசீரமைப்பையும்,வரி அதிகரிப்பு நாணய நிதியத்தின் பிரதான நிபந்தனைகளாகும்.
நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மறுசீரமைப்பது சாத்தியமாக காணப்பட்டாலும் சர்வதேச பிணையங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மறுசீரமைப்பது சவால்மிக்கதாகும். இலங்கை 2007ஆம் ஆண்டு முதன் முதலாக சர்வதே பிணையங்களிடமிருந்து கடன் பெறும் தீர்மானத்தை எடுத்தது.2007ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 3.5 பிலலியன் அமெரிக்க டொலர் கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் நான்கரை வருட காலத்திற்குள் சர்வதே பிணையங்களிடமிருந் து 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.இந்த கடன்களை மறுசீரமைப்பது சவால்மிக்கதாகும்.இவற்றை கருத்திற் கொண்டு தான் சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதாக குறிப்பிட்டு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.அரசாங்கமும் அந்த நிபந்தனைகளை அமுல்படுத்தி நடுத்தர மக்களை பொருளாதார ரீதியில் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
உலக வங்கியின் ஆலோசனைக்கமைய இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக அறிவிக்கப்பட்டது,தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய இலங்கை குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தவிர்த்து பிற நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1980ஆம் ஆண்டு ஆஜன்டீனா வங்குரோத்து நிலை அடைந்தது.சர்வதேச நாணய நிதித்தின் ஒத்துழைப்பை பெற்றும் ஆஜன்டினாவினால் முன்னேற்றமடைய முடியவில்லை.ஐந்து முறை தொடர்ந்து வங்குரோத்து நிலையை அடைந்த வண்ணம் உள்ளது.1980ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பல அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தும் ஆஜன்டீனா வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை.இந்த நிலைமைக்கு இலங்கையை கொண்டு செல்லும் வழிமுறையே ஏற்படுத்தப்படுகிறது.
நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மின்சார கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் வெகுவிரைவில் நாட்டில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கும்.நாட்டு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் நாட்டு மக்கள் பட்டினியிலா வாழ்வது,
பொருளாதார பாதிப்பிற்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான திட்டங்களை செயற்படுத்த ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.எம்.சி.சி ,எட்கா ஒப்பந்தத்தை பெயர்மாற்றி கைச்சாத்திட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் வாரம் வீதிக்கு இறங்கி போராடுவோம்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் 2023ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் என குறிப்பிடும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததும்,இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றார்.