எச்.ஐ.வி தொற்று தொடர்பில் விசாரணை நடத்துங்கள் – சுகாதார தொழில் வல்லுநர் அமைப்பு

101 0

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் உட்பட இளம் பிக்குகள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி உள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவை மூலமாக கொண்டு வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்,அவர்களின் திருமண வாழ்விற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நபரின் தனிப்பட்ட தகவல்களை எக்காரணிகளுக்காகவும் மூன்றாவது தரப்பினர் அறிந்துக் கொள்ள கூடாது,எச்.ஐ.வி.பரிசோதனைக்கு வரும் நபர்கள் அசௌகரியங்களுக்குள்ளாக்கப்பட கூடாது என்பது தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பிரதான கொள்ளையாகும்.

எச்.ஐ.வி தொற்று தொடர்பில் அண்மையில் வெளியாகியுள்ள செய்தி தற்போதைய பிரதான பேசுபோருளாக காணப்படுகிறது.பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பானோர் உட்பட இளம் பிக்குகள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவை மூலமாக கொண்டு செய்தி வெளியாகியுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நபர் தொடர்பான விபரங்களை வெளியிட கூடாது என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது குழு அடிப்படையிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.மசாஜ் மையங்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவை மூலமாக கொண்டு வெளியான செய்தியால் பல்கலைக்கழக மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,பல்கலைக்கழக மாணவர்களின் திருமண வாழ்விற்கும் இந்த செய்தி என்றாவது பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த செய்தி தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுகாதாரத்துறை அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.